பார்த்தீனியத்தை கட்டுப்படுத்த உதவும் ஒருங்கிணைந்த களை மேலாண்மை – வேளாண்மை இணை இயக்குநர் தகவல்
கோவை: பார்த்தீனியத்தை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த களை மேலாண்மை முறை உதவுகிறது என கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தெரிவித்தாா்.
மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முத்துலட்சுமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பார்த்தீனிய செடிகள் முட்டை வடிவமான இலைகளை கொண்டது. இதன் இலையின் மேல் வெள்ளை நிற ரோமங்கள் உள்ளன. செடியின் முதிர்ந்த இலைகள், இளம் செடிகள் பொதுவாக அதிக ஆழம் கொண்ட ஆணிவேர் அமைப்புடையது. பார்த்தீனிய செடியில் ஒவ்வொரு பூங்கொத்துகளிலும் நான்கு விதைகள் காணப்படும். இந்த விதைகள் நான்கே வாரத்துக்குள் நிலத்தில் விழுந்து முளைத்து மீண்டும் பூத்து விதைகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை
ஒருமுறை பார்த்தீனியம் உற்பத்தியாகி விட்டால் எந்த சூழ்நிலையிலும், அதாவது மழை, வறட்சி எதையும் தாங்கி வளரக்கூடியது. ஒருங்கிணைந்த பார்த்தீனிய களை மேலாண்மைதான் பார்த்தீனியத்தை கட்டுப்படுத்தும் முறை.
ஒருங்கிணைந்த பார்த்தீனியம் கட்டுப்பாட்டு முறைகள் என்றால், பொது இடங்கள் அல்லது பயிரிடாத நிலங்களில் இருக்கும் பார்த்தீனிய செடிகளை இயற்கை சூழல் பாதிக்காமல் அகற்ற வேண்டும். ஆவாரை, அடர் ஆவாரை, துத்தி, நாய் வேளை, சாமந்தி ஆகிய செடிகளின் விதைகளை மழைக்காலங்களில் விதைக்க வேண்டும். இந்த செடியின் அதிக வளர்ச்சி பார்த்தீனிய செடியை வளரவிடாமல் தடுத்து விடுகிறது.
மழைப்பருவம் ஆரம்பிக்கும் காலமே மெக்ஸிகன் வண்டுகளின் உற்பத்திக்கு உகந்த காலமாகும். எனவே, மெக்சிகன் வண்டுகள் அதிக எண்ணிக்கையில் காணப்படும்போது, வண்டுகளை சேகரித்து பார்த்தீனியம் மிகுந்த பகுதிகளில் விட வேண்டும். பூங்காக்களிலும், தோட்டங்களிலும், புல் தரைகளிலும் மற்றும் விவசாய நிலங்களிலும் பார்த்தீனியத்தை ஆட்களைக் கொண்டு கையுறை அணிந்து அகற்றிட வேண்டும். வேரோடு அகற்றுவதோடு, பார்த்தீனியத்தினால் ஏற்படக்கூடிய தோல் சம்பந்தமான உபாதைகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
மீண்டும் மீண்டும் பார்த்தீனியம் வளரும் இடங்களில், உடனடியாக கட்டுப்படுத்த அட்ரஸின் (2.5 கிலோ / ஹெக்டேர்) பார்த்தீனியம் முளைப்பதற்கு முன்பும், சாதாரண உப்பு மற்றும் டீப்பால் (200 கிராம் 2 மி.லி டீப்பால் / ஒரு லிட்டர் தண்ணீருக்கு) 2, 4-டி சோடியம் உப்பு அமோனியம் சல்பேட் சோப்பு கரைசல் (10 கிராம் 20 கிராம் 2 மி.லி / ஒரு லிட்டர் தண்ணீருக்கு) மற்றும் மெட்ரி பூசின் சோப்பு கரைசல் (4 கிராம் 2 மி.லி/ ஒரு லிட்டர் தண்ணீருக்கு) போன்ற களைக்கொல்லிகளைப் பார்த்தீனியம் பூக்கும் தருணத்துக்கு முன்பும் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் என அவர் கூறியுள்ளார்.
நன்றி:இந்து தமிழ் திசை