கோடை, மானாவாரிக்கு ஏற்ற பருத்தி ரகங்கள்
நார்ப்பயிர்களின் அரசனாகவும் வெள்ளைத் தங்கமாகவும் போற்றப்படுவது பருத்தி பயிர். இதை பணப்பயிர் என்றும் கூறுவோம்.
இதில் ஆசிய, ஆப்பிரிக்க பருத்தி வகையைச் சேர்ந்தது காசிப்பியம் ஆர்போரியம், காசிப்பியம் ஹெர்பேசியம். அமெரிக்க பருத்தி வகையைச் சேர்ந்தது காசிப்பியம் ஹிர்சூட்டம், காசிப்பியம் பார்படன்ஸ். இவை பயிரிட ஏற்ற ரகங்கள்.
பருத்தி உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ள போதிலும் உலக நாடுகளை ஒப்பிடுகையில் உற்பத்தி திறன் மிகவும் குறைவு தான். நம் நாட்டில் பருத்தி 70 சதவீதத்துக்கு மேல் மானாவாரியில் பயிரிடப்படுகிறது. விட்டு விட்டு பெய்யும் மழை மற்றும் பூச்சி, நோய் தாக்குதல்களினால் உற்பத்தித் திறன் குறைகிறது.
தமிழகத்தில் நிலை என்ன
தமிழகத்தில் தேவையை விட உற்பத்தி குறைவாகவே உள்ளது. உற்பத்தி மற்றும் தேவைக்கு இடையேயான இடைவெளியைக் குறைக்க வேண்டும். அதற்கு பயிரிடும் பரப்பளவு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க சரியான தொழில் நுட்பங்களை கடைப்பிடிப்பது விவசாயிகளின் அவசிய தேவை.
நல்ல ரகங்களே உயர் விளைச்சலுக்கு அடிப்படை. கோவை வேளாண்மைப் பல்கலை மற்றும் கோவை மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் உயர் விளைச்சல் மற்றும் வீரிய ஒட்டு ரகங்களை உருவாக்கியுள்ளனர். வேளாண்மைப் பல்கலை பருத்திதுறையில் வெளியிட்டுள்ள எம்.சி.யு 5, எம்.சி.யு.7, கோ 14 மற்றும் கோ 17 ஆகியவை சிறந்த ரகங்கள். எம்.சி.யு.5 மற்றும் கோ14 இரண்டும் மிக நீண்ட இழை பருத்தி வகையை சேர்ந்தது.
கோ 17 ரகம் 125 – 135 நாட்களில் முதிர்ச்சியடையும். குறுகிய காலத்தில் காய் பிடிக்கும். செடியில் கிளை இருக்காது. சராசரியாக எக்டேருக்கு 2361 கிலோ என்ற அளவில் விதை பருத்தி மகசூல் கிடைக்கும். இந்த ரகம் நெல் தரிசாக தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டங்களில் பயிரிட ஏற்றது.
பெரம்பலூர், திண்டிவனம், மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடியில் குளிர்கால மானாவாரிக்கு ஏற்றது. மதுரை, தேனி மற்றும் விருதுநகரில் கோடைகால பாசனத்திற்கும் பயிரிட ஏற்றது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியிடப்பட்ட எஸ்விபிஆர் 2, எஸ்விபிஆர் 4, எஸ்விபிஆர் 5 மற்றும் எஸ்விபிஆர் 6 ரகங்கள் அதிக மகசூல் தரக்கூடியது. கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள கேசி 2 மற்றும் கேசி 3 ரகங்கள் மானாவாரிக்கு உகந்தது.
சுத்தமான பருத்திச் சுளைகளை துணிப்பை அல்லது சாக்குப் பையிலோ வைத்துக் கொண்டு தரம் குறைந்த அல்லது கொட்டை பருத்தியை தனியாக இன்னொரு பையிலும் சேகரிக்க வேண்டும்.
துணிப்பையில் சேமிப்பதால் பருத்தி மாசுபடாமல் சுத்தமாக இருக்கிறது. எடுத்த பருத்தியை வயலில் மண் தரை மேல் கொட்டி வைப்பதோ, நாள் முழுவதும் வெப்பத்தில் காயும்படி விடுவதோ கூடாது. விற்பனைக்கு முன் நல்ல பருத்தி, கொட்டைப் பருத்தியை மறுபடியும் தரம் பிரித்து சாக்குப் பைகளில் தைத்து விற்பனைக்கு அனுப்பவேண்டும்.
– ராஜேஸ்வரி துறைத்தலைவர் மகாலிங்கம்,
பேராசிரியர் பருத்தி துறை,
பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையம்,
கோவை வேளாண் பல்கலை
cotton@tnau.ac.in
நன்றி:தினமலர்