ரூ.743 கோடி முதலீடு, பயனடையப்போகும் 2.5 லட்சம் விவசாயிகள்… மத்திய அரசின் சம்பதா திட்டம்!
விவசாயிகள் | Representational Image
விவசாயிகளின் நல்வாழ்வுக்காகவும் வேளாண்துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கவும், மத்திய அரசால் பிரதமரின் கிசான் சம்பதா யோஜனா திட்டம் (Pradhan Mantri Kisan Sampada Yojana) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வேளாண் கடல்சார் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் பதப்படுத்துதல் மையங்களை மேம்படுத்துதலுக்கான திட்டம் ‘சம்பதா’ என்று அழைக்கப்படுகிறது. (SAMPADA- Scheme for Agro-marine Processing and Development of Agro processing clusters). 2017-ம் ஆண்டு மே மாதம் மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
விவசாயிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 16,200 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
ஹர்சிம்ரத் கவுர், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர்
பிரதான் மந்திரி கிசான் சம்பதா திட்டத்தின்கீழ் மத்திய அரசு தற்போது செயல்படுத்தி வரும் பிரமாண்ட உணவுப் பூங்காத் திட்டம், ஒருங்கிணைந்த குளிர்பதன மற்றும் மதிப்புக் கூட்டுக் கட்டமைப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர உத்தரவாதக் கட்டமைப்பு போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், வேளாண் பதப்படுத்தும் மையங்களுக்கான கூட்டமைப்புகளை ஏற்படுத்துதல், அவற்றுக்கு முன்னும் பின்னுமான இணைப்பு வசதிகளை உருவாக்குதல், உணவுப் பதனம் மற்றும் சேமிப்புக்கான புதிய வசதிகளை உருவாக்குதல் மற்றும் ஏற்கெனவே உள்ள வசதிகளை விரிவாக்குதல் போன்ற புதிய திட்டங்களும் இத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் 27 ஒருங்கிணைந்த குளிர்பதன திட்டங்களுக்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தத் திட்டங்களுக்குப் பிரதமரின் சம்பதா யோஜனாவின் ஒருங்கிணைந்த குளிர் பதனம் மற்றும் மதிப்புக் கூட்டல் உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் குளிர் பதனத் திட்டங்கள் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குப் பயனளிக்கும். தமிழ்நாட்டில் 4 திட்டங்களுக்கும், ஆந்திரப் பிரதேசத்தில் 7 திட்டங்களுக்கும், பீகாரில் ஒரு திட்டத்துக்கும், குஜராத்தில் 2 திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.சம்பதா திட்டம்
இந்த ஒருங்கிணைந்த குளிர் பதனத் திட்டங்கள் மூலம் 743 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்று நாடு முழுவதும் நவீன உள்கட்டமைப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அழுகக்கூடிய பொருள்களைப் பாதுகாக்கப் போதுமான உள்கட்டமைப்பை உருவாக்குவதால், விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதோடு, பழங்கள் மற்றும் காய்கறித் துறையில் இந்தியாவைத் தற்சார்பு உடையதாக மாற்ற உதவும் எனவும் அரசு தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
நன்றி:விகடன்