தென்னையில் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை முறைகள்
சமீப காலங்களில் தென்னை மற்றும் பாக்கு பயிர்களில்ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ என்ற பூச்சியின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. சுருள் வெள்ளை ஈக்களின் தாக்கமானது மரங்களின் அடிப்பாகத்தில் உள்ள ஓலைகளில் மட்டுமே இருப்பதால் மகசூல் இழப்பு ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. ஆகையால் விவசாயிகள் இது குறித்து அச்சம் கொள்ளாமல், பின்வரும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றி தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- ஏக்கருக்கு 2 எண்கள் வீதம் மஞ்சள் விளக்குப் பொறி அமைத்தல்
- ஏக்கருக்கு 8 எண்கள் வீதம் மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகள் அமைத்தல்,
- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆழியார் தென்னை ஆராய்ச்சி மையத்தில் இருந்து எதிர் உயிரி பூச்சியான என்கார்சியா ஒட்டுண்ணிகளை பெற்று ஏக்கருக்கு 100 எண்கள் வீதம் வெளியிடுதல்
- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையத்திலிருந்து கிரைசோபெர்லா இரைவிழுங்கிகளை பெற்று ஏக்கருக்கு 400 வீதம் விடுதல்
- பாதிக்கப்பட்ட ஓலைகளின் மேல் தண்ணீரை வேகமாக அடிப்பதன் மூலமும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்.
மேலும் வெள்ளை ஈக்களை முழுவதுமாக கட்டுப்படுத்த, விவசாயிகள் இரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது