உயர் மகசூலுக்கு மானிய விலையில் நுண்ணூட்ட உரம்
நடப்பு பருவத்தில் சாகுபடி செய்துள்ள பயிர்களில் உயர் மகசூல் பெற நுண்ணூட்ட உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
இது குறித்து, கிருஷ்ணகிரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் நெல், சிறு தானிய பயிர்கள், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள் என மொத்தம், 7,500 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த பயிர்களுக்கு நுண்ணூட்ட சத்துகள் இடுவது முக்கியமானதாகும். பயிருக்கு குறைந்த அளவே தேவைப்படும் இரும்பு, துத்தநாகம், போரான், மாங்கனீசு போன்றவை நுண்ணூட்ட உரங்கள் ஆகும். இவை, பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. நுண்ணூட்ட உரங்கள் இடுவதால், மொத்த மகசூலில், 15 முதல் 20 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெறலாம். முக்கியத்துவம் வாய்ந்த இந்த நுண்ணூட்ட உரங்களை தமிழக அரசு வேளாண் துறை சார்பில், இரண்டரை கிலோ கலவை பொட்டலங்களாக மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. நடப்பு பருவத்தில், கிருஷ்ணகிரி வட்டார விவசாயிகள், கூடுதல் மகசூல் பெற ஜி.எஸ்.டி., நீங்கலாக, 50 சதவீத மானிய விலையில் நுண்ணூட்ட உரங்களை பெற்று, பயிருக்கு இட தங்களது சிட்டா நகல், ஆதார் எண்ணுடன் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
நன்றி:அக்ரி டாக்டர்