தென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த ஆலோசனை
தென்னை மரங்களைத் தாக்கும் ரூகோஸ் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக வேளாண்மைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி, அண்ணாகிராமம் ஆகிய வட்டாரங்களில் சுமார் 3,625 ஏக்கரில் தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது நிலவி வரும் தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக மாவட்டத்தில் தென்னை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது.
இது தொடர்பாக வேளாண்மை இணை இயக்குநர் ஜி.ஆர்.முருகன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்கு பிறகு, தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளைக் கையாண்டு கட்டுப்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்கினர்.
இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது: வயதில் முதிர்ந்த பெண் ஈக்கள், மஞ்சள் நிற நீள்வட்ட முட்டைகளை சுருள் வடிவ அமைப்புகளில் ஓலைகளின் அடிப்பாகத்தில் இடுகின்றன. முட்டைகளில் இருந்து வெளிவரும் இளம் குஞ்சுகள் இலைகளின் சாற்றை உறிஞ்சி வளர்கின்றன. நான்கு பருவங்களை கடந்த பின்னர் முதிர்ந்த ஈக்களாக வெளிவருகின்றன. இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவம் ஓலைகளின் மேற்பரப்பில் பரவுகின்றன.
சுமார் 20 முதல் 30 நாள்களில் முழு வளர்ச்சியடைந்த ஈக்களாக மாறி வட்டம் வட்டமாக தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் காணப்படுகின்றன. இவை காற்றின் திசையில் எளிதில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள மரங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
வெள்ளை ஈக்கள் அனைத்து தென்னை ரகங்களிலும் காணப்பட்டாலும் ஆரஞ்சு குட்டை, மலேசியன் மஞ்சள் குட்டை, மலேசியன் பச்சைகுட்டை ஆகிய குட்டை ரகங்களிலும், குட்டை, நெட்டை வீரிய ஒட்டு ரகங்களிலும் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஒரு லிட்டர் நீருக்கு வேப்ப எண்ணெய் 30 மில்லி (அ) அசாடிராக்டின் ஒரு சதவீதம் (2 மில்லி) மருந்தை ஒரு மில்லி ஒட்டுத் திரவத்துடன் கலந்து தென்னை ஓலையின் அடிப்புறத்தில் தெளிக்க வேண்டும். கரும்பூஞ்சாணத்தை நிவர்த்தி செய்ய மைதா மாவு கரைசலை (ஒரு லிட்டர் நீருக்கு 25 கிராம் பசை) ஓலைகளின் மீது நன்கு படுமாறு தெளிக்கவும். மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் உருவாக்கப்பட்ட ஒட்டும் பொறிகளை (நீளம் 3 அடி, அகலம் ஒரு அடி) ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் ஆங்காங்கே தொங்க வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம்.
கிரைஸோபா இரை விழுங்கிகளை எக்டேருக்கு ஆயிரம் என்ற எண்ணிக்கையில் விடவும். இந்த வகை வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவும் போது காக்ஸிடினல்லிட் பொறி வண்டுகள், என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் ஆகிய இயற்கை எதிரிகள் தோப்புகளிலேயே இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். எனவே, தென்னந்தோப்புகளில் எக்காரணம் கொண்டும் பூச்சி மருந்து தெளிப்பதை தவிர்க்க வேண்டும்.
ஆகவே, தோப்புகளில் இவ்வகை இயற்கை எதிரிகளால் தாக்குதலுக்குள்ளான ஓலைகளை சிறிய அளவில் வெட்டி, பாதிப்பு அதிகமாக இருக்கும் மரங்களின் மீது வைத்து வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
நன்றி:அக்ரி டாக்டர்