பயறுகள் தட்டுப்பாட்டைப் போக்க மானாவாரி பயிர்களுக்கு ஊக்கம்
மத்திய அரசு முடிவு
நடப்புப் பயிர் ஆண்டின் காரீப் பருவத்தில் பயறு வகைகள் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக குறைந்த கால அறுவடை கொண்ட மானாவாரி பயிர்கள் உற்பத்தியை அதிகரிக்கும் படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
ராபி அறுவடை மற்றும் காரீப் விதைப்புக்கு இடைப்பட்ட பிப்ரவரி – ஜூன் காலத்தில் இந்தப் பயிர்களை பயிரிடச் செய்ய விவசாயிகளுக்கு ஊக்கமளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வகையில் உளுந்து, பாசிப் பயறு போன்ற முக்கிய பயிர் ரகங்களை 4.9 மில்லியன் ஹெக்டேர் பரப்பில் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டில் 2.8 மில்லியன் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட நிலையில் நடப்புப் பருவத்தில் 75 சதவீதம் கூடுதல் பரப்பில் பயிரிட இலக்குக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கர்னாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் அதிகப்படியான மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக பயறு வகைப் பயறுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அறுவடை முடிந்த நிலங்களில் பருவமழை சாராத மானாவாரி பயிர்களை பயிரிடுமாறு விவசாயிகளை ஊக்குவித்து வருவதாக வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடப்புப் பருவத்தில் பாசிப் பயறு உற்பத்தி 30 சதவீதம் அளவுக்கும், உளுந்து உற்பத்தி 50 சதவீதம் அளவுக்கும் குறைய வாய்ப்புள்ளதாக இந்திய பயறுகள் மற்றும் தானிய கூட்டமைப்பு (IPGA) மதிப்பீடு செய்துள்ளது. நடப்பாண்டில் 26.3 மில்லியன் டன் அளவுக்கு பயறுகள் உற்பத்தி செய்ய இலக்குக் கொள்ளப்பட்ட நிலையில் அதில் 10 சதவீதம் அளவுக்கு உற்பத்தி குறைவாகவே இருக்கும் என வேளாண் அமைச்சகமும் மதிப்பிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக மானாவாரிப் பயிர்களைப் பயிரிடுவது அதிகரித்து வருவதாகவும், இதன் மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு வருவாய் கிடைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான விவசாயிகள் காரீப் பருவத்தில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மானாவாரி சாகுபடியை அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காரீப் பருவத்தில் 100 மில்லியன் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் பயிர்கள் சாகுபடி செய்யப்படும் நிலையில், மானாவாரி சாகுபடியில் முக்கியமாக பயறு வகை பயிர்கள் மொத்த சாகுபடிப் பரப்பில் 2 சதவீத அளவு பரப்பிலேயே மேற்கொள்ளப்படுகிறது. வழக்கமாக காரீப் பருவத்தில் 12 மில்லியன் ஹெக்டேர் பரப்பிலும், ராபி பருவத்தில் 14 மில்லியன் ஹெக்டேர் பரப்பிலும் பயறுகள் பயிரிடப்படுகின்றன.
மானாவாரி சாகுபடியைப் பொருத்தவரை 2017-18ம் ஆண்டில் 2.1 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்பட்டதாகவும், அடுத்த ஆண்டில் இது 2.8 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. நடப்புப் பருவத்தில் 4.9 மில்லியன் ஹெக்டேர் அளவுக்கு சாகுபடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மானாவாரி சாகுபடியில் நல்ல அறுவடையைப் பெறுவதற்கு வறண்ட காலநிலையும், பாசனவசதியும் தேவை. தற்போது நாட்டின் முக்கிய 120 அணைகளில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 155 சதவீதம் அதிகமாக நீர் இருப்பு உள்ளதால் நடப்பாண்டில் மானாவாரி சாகுபடியை சிறப்பாக மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி:அக்ரி டாக்டர்