பூச்சி மேலாண்மை: 12 – ஒட்டுண்ணிகள் இருந்தால்தான் இயற்கைப் பண்ணை!
SELVAM N
ஆர்.குமரேசன்
பூச்சிகளும் நம் நண்பர்களே..! – 2.0
பூச்சி மேலாண்மை
ஒட்டுண்ணிக் குளவிகள் மூலம் தீமை செய்யும் பூச்சிகள் அழிவது மட்டும்தான் உயிரியல் கட்டுப்பாடு என்பதல்ல. உயிரியல் கட்டுப்பாட்டில், இரை விழுங்கிகள், வைரஸ்கள், பாக்டீரியாக்கள், நூற்புழுக்கள் மற்றும் இனக்கவர்ச்சிப்பொறிகள் ஆகியவை அடங்கியுள்ளன. ஓர் உயிர், இன்னோர் உயிரைக் கொன்றால் அது உயிரியல் கட்டுப்பாடு. உயிரியல் கட்டுப்பாடு நிகழும் முறை குறித்துக் கடந்த இதழில் பார்த்தோம். உயிரியல் கட்டுப்பாடுமூலம் முழுமையாகப் பூச்சிகளை ஒழிக்க முடியாததற்கும் சில காரணங்கள் இருக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட வகைத் தீமை செய்யும் பூச்சிக்கு எதிராக, ஒட்டுண்ணிக் குளவியோ இரைவிழுங்கிப் பூச்சியோ வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அப்படி வெளிநாட்டிலிருந்து வரும் பூச்சி, அந்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப வளர்ந்திருக்கும். அது, நம் நாட்டில் நிலவும் தட்பவெப்ப நிலையில் செயல்படுமா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இறக்குமதி செய்யப்படும் நன்மை செய்யும் பூச்சிகள், பொருளாதார ரீதியில் கட்டுப்படியாகுமா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
பப்பாளியைத் தாக்கும் மாவுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்காக மெக்சிகோ நாட்டிலிருந்து ஒட்டுண்ணிக் குளவி இறக்குமதி செய்யப்பட்டது. அந்தக் குளவி மெக்சிகோ நாட்டின் காலச் சூழ்நிலைக்கேற்ப வளர்ந்தது. அதே சூழ்நிலை இந்தியாவிலும் இருந்தால், அது சிறப்பாகச் செயல்படும். சூழ்நிலை ஒத்து வராதபோது எதிரான விளைவுகளையே ஏற்படுத்தும்.
பார்த்தீனியத்தை அழிப்பதற்காக மெக்சிகோவிலிருந்து ஒரு வண்டு இறக்குமதி செய்யப்பட்டது. ‘ஜைக்கோகிரம்மா பைகோலரேட்டா’ (Zycogramma Bicolorata) என்ற அந்த வண்டு, பொறி வண்டைப்போல இருக்கும். அந்த வண்டை இறக்குமதி செய்யும்போது ஒரு சிக்கல் உருவானது. அந்த வண்டு சூரியகாந்திப் பயிரில் பிரச்னை ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்டது. நன்மை செய்யும் பூச்சியாக வயலில் இறக்கிவிடப்படும் இந்த வண்டு, சூரியகாந்தியில் தீமை செய்யும் பூச்சியாக மாற வாய்ப்புண்டு என்றார்கள். ஆனால், இப்போதுவரை, இந்தியாவில் அந்தப் பிரச்னை இல்லை. அந்தப் பொறிவண்டு விடப்பட்ட பகுதிகளில் பார்த்தீனியம் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது.
ரசாயனப் பூச்சிக்கொல்லி உடனடியாக வேலை செய்யும். ஆனால், உயிரியல் கட்டுப்பாடு முழுமையாக வேலை செய்யச் சில நாள்கள் ஆகும். ரசாயன பூச்சிக்கொல்லிகளால் பல்லுயிர் பெருக்கம், பயிர்ச்சூழல் போன்றவற்றில் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால், உயிரியல் கட்டுப்பாட்டில் இந்தப் பாதிப்புகள் இருக்காது. ரசாயன உரம் பயன்படுத்தும் நிலங்களில் ஒட்டுண்ணிக் குளவிகள் மற்றும் இரை விழுங்கிகள் மூலம் முழுப் பலன் கிடைக்காது. இயற்கை வழி வேளாண்மை மேற்கொள்ளப்படும் நிலங்களில்தான் இவை சிறப்பாகச் செயல்படுகிறது.
உயிரியல் கட்டுப்பாட்டில் பயன்படுத்தும் குளவிகள், இரை விழுங்கிகள் போன்றவற்றைப் பரிசோதித்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப் பல ஆண்டுகள் ஆகும். அது செல்லவிருக்கும் பகுதியின் தட்பவெப்பநிலையைத் தாங்கி வளருமா என்பதைக் கண்டுபிடிக்கப் பல்வேறு சோதனைகள் நடத்தப்படும். பலகட்ட சோதனைகளுக்குப் பிறகே அவை வெளியிடப்படுகின்றன. இரை விழுங்கிப் பூச்சி, தினமும் 50 பூச்சிகளை உண்ணும். அத்தனை பூச்சிகளைச் சாப்பிட்டால்தான் அது புழுப் பருவத்திலிருந்து கூட்டுப்புழுப் பருவத்தை அடையும். ஒரு பொறிவண்டின் புழு சாப்பிட, ஒரு நாளைக்கு 50 அசுவினிகள் தேவைப்படும். பொறிவண்டின் புழுப் பருவம் 25 நாள்கள். ஆக, ஒரு பொறிவண்டுப் புழு, கிட்டத்தட்ட 1,250 அசுவினிகளைக் காலி செய்துவிடும்.
ஒரு பொறிவண்டு புழு, கிட்டத்தட்ட 1,250 அசுவினிகளைக் காலி செய்துவிடும். ஒட்டுண்ணிகளை இரண்டு, மூன்று ஆண்டுகள்வரை பயன்படுத்தலாம்; பிறகு வயலிலேயே உருவாகிவிடும்.
ஒட்டுண்ணிகள், ஒரு பூச்சியை மட்டும்தான் தாக்கும். அதில் அதன் மொத்த வாழ்க்கைச் சுழற்சியைக் கழித்துவிட்டு தாய்ப் பூச்சிகளாகத் தான் வெளியேறும். முட்டை ஒட்டுண்ணிக் குளவி, ஒரு புழுவில் முட்டை இடும். அது பொரியும்போது வெளிவரும் புழுக்கள், அந்த ஒரு புழுவை மட்டும் முழுமையாகச் சாப்பிட்டுக் கூட்டுப் புழுவாக மாறிவிடுகின்றன. முட்டை ஒட்டுண்ணிகள் உருவத்தில் மிகச்சிறியவை என்று சொல்லியிருக்கிறேன். ஒரு பச்சைப்புழுவின் முட்டைக்குள் குளவி முட்டை இடும். அதிகபட்சம் இரண்டு முட்டைகள் வரைதான் இடும். முதலில் முட்டையிட்ட குளவி, முட்டையை உள்ளே செலுத்தியவுடன் பின்பகுதியில் உள்ள ரோமத்தை வைத்து அந்த இடத்தில் தேய்த்துவிட்டுச் செல்லும். அதுதான் அடையாளம். அடுத்து வரும் குளவி, தனது முன்பகுதியில் உள்ள இரண்டு கொம்பை வைத்துத் தட்டிப் பார்க்கும். முட்டைக்குள் வேறு ஏதாவது முட்டைகள் இருக்கின்றனவா என அசைத்துப் பார்க்கும். முட்டைக்குள் வேறு முட்டைகள் இருந்தால், அதற்கேற்ப ஆட்டம் இருக்கும். அந்த ஆட்டத்தை வைத்து உள்ளே எத்தனை முட்டைகள் இருக்கின்றன என்பதைக் குளவி கண்டுகொள்ளும். கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறு குளவி, முட்டையின் ஆட்டத்தைக் கணக்கிட்டு, உள்ளே இருக்கும் முட்டைகளைத் தெரிந்துகொள்வதுதான் இயற்கையின் அதிசயம்.
பச்சைப்புழுவின் முட்டைக்குள் இரண்டு முட்டைகள் மட்டுமே வைக்க முடியும். ஆட்டிப் பார்க்கும்போது, இரண்டு முட்டைகள் இருப்பதை உணர்ந்தால், ‘நம்மாளு ஏற்கெனவே வேலையைக் காட்டிவிட்டான்’ எனப் புரிந்துகொண்டு அதில் முட்டை இடாமல் போய்விடும். ஒரு முட்டை மட்டும் இருந்தால் கூடுதலாக ஒரு முட்டையை வைத்துவிட்டுப் போகும். ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்த டிரைக்கோகிரம்மாவில் மட்டும் 200 வகைகள் இருக்கின்றன. அவற்றில் 6 வகையான குளவிகள் முட்டை ஒட்டுண்ணிகளாக வெளியிடப்பட்டிருக்கின்றன. ஒட்டுண்ணி அட்டையின் நிறம் மஞ்சளாக இருந்தால், அது டிரைக்கோகிரம்மா கைலோனிஸ். சிவப்பு நிறமாக இருந்தால் டிரைக்கோகிரம்மா ஜப்பானிகம். தற்போது மக்காச்சோளத்தில் பிரச்னையாக உள்ள அமெரிக்கன் படைப்புழுவுக்கு எதிராகச் செயல்படுவது, டிரைக்கோகிரம்மா பிரிட்டியோசம். இவை மூன்றுதான் நமக்குத் தெரிந்தது.
ஒவ்வொரு குளவியும், அதற்கு விருப்பமான தீமை செய்யும் பூச்சியின் முட்டையில்தான் முட்டையிடும். ஜப்பானிகம், கைலோனிஸ் முட்டை போடும் பூச்சியில் போடாது. பிரட்டியோசம் அமெரிக்கன் படைப்புழு முட்டைகளில் மட்டுமே விருப்பப்பட்டு முட்டையிடும். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குரிய விருந்துப்பூச்சிகள் இருக்கின்றன. அவற்றின் முட்டைகளில்தான் விருப்பப்பட்டு முட்டை போடும். பிரியாணி கிடைக்காதபோது, தயிர் சாதம் என்பதுபோல விருப்பமான முட்டைகள் கிடைக்காதபோது, கிடைக்கும் எதிரி முட்டையில் முட்டையிடும்.
ஒட்டுண்ணிகள், இரைவிழுங்கிகள், வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சணங்கள் போன்றவை ஆய்வகங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றை உருவாக்கும் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகங்கள், மத்திய, மாநில அரசுகளிடம் இருக்கின்றன. அந்த ஆய்வகங்களில் நன்மை செய்யும் உயிரினங்களை அதிகளவில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அவற்றை வாங்கி விவசாயிகள் வயலில் விடலாம். விவசாயிகளுக்கு உயிரிகளை வழங்குவது, நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சி மட்டுமே. இப்படிச் சோதனைச்சாலைகளில் உருவாகும் நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள், இரை விழுங்கிகள் போன்றவை, பிராய்லர் கோழி போலத்தான். ஆய்வகங்களில் கட்டுப்பாடான சூழ்நிலையில் வளர்பவை இவை. வயலில் விடும்போது, சுள்ளென அடிக்கும் வெயில் மற்றும் மழை காரணமாக எதிரிப் பூச்சிகளைத் தேடி நீண்ட தூரம் போவதில்லை. பிராய்லர் கோழிகளைப்போல, சுற்றிக் கிடைக்கும் உணவை மட்டுமே உண்ணும்.
‘‘ரசாயன உரம் பயன்படுத்தும் நிலங்களில் ஒட்டுண்ணிக் குளவிகள் மற்றும் இரை விழுங்கிகள் மூலம் முழுப் பலன் கிடைக்காது. இயற்கை வழி வேளாண்மை மேற்கொள்ளப்படும் நிலங்களில்தான் இவை சிறப்பாகச் செயல்படுகிறது.’’
கடந்த இதழில் வலசைப் போகும் பட்டாம்பூச்சி பற்றிச் சொல்லியிருந்தேன். அந்தப் பட்டாம்பூச்சியின் வலசைப் போகும் குணத்தை அறிவதற்காக ஆய்வகங்களில் வளர்த்து வெளியில் விட்டார்கள். ஆனால், இயற்கையான பட்டாம்பூச்சி பறக்கும் தூரத்தில் பத்தில் ஒரு பங்குகூட ஆய்வகத்தில் உருவான பட்டாம்பூச்சியால் பறக்க முடியவில்லை. அதே கதிதான் ஆய்வகங்களில் வளரும் நன்மை செய்யும் பூச்சிகளுக்கும். தற்போது ஆய்வகங்களில் உருவாகும் ஒட்டுண்ணிகளைக் கொடுப்பது, விவசாயிகளுக்கு விழிப்பு உணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான்.
இப்படிப்பட்ட ஒட்டுண்ணிகளை இரண்டு, மூன்று ஆண்டுகள்வரை பயன்படுத்தலாம். அதற்கு மேல், அவை வயலிலேயே உருவாகிவிடும். அப்படி உருவானால்தான் அது முழுமையான இயற்கை விவசாயப் பண்ணையாக இருக்க முடியும். ஏழு ஆண்டுகளாக ஒருவர் ஒட்டுண்ணி அட்டையைப் பயன்படுத்தி வருகிறார் என்றால், அவர் இயற்கை விவசாயத்தையும் பூச்சிகளையும் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். வரப்புப் பயிராகவும், ஊடுபயிராகவும் தட்டைப்பயறு, ஆமணக்கு, சூரியகாந்தி, மஞ்சள் நிறம் கொண்ட பூக்கள் போன்றவற்றை வளர்க்கும்போது டிரைக்கோகிரம்மா, பொறிவண்டு, பச்சைக் கண்ணாடி இறக்கைப் பூச்சி, சிலந்தி, பெருமாள் பூச்சி, கொலைகார நாவாய் பூச்சி போன்றவையெல்லாம் தானாகவே வயலுக்கு வரும். அப்படித் தானாக வயலுக்கு வரும்போதுதான் அந்த நிலம், முழுமையான இயற்கை விவசாய நிலமாக மாறும்.
இயற்கையாக வயலில் உருவாகும் நன்மை செய்யும் பூச்சிகள், நாட்டுக்கோழிகளைப் போன்றவை. உணவைத் தேடித்தேடிப் பிடித்து உண்ணும். அவை நிலத்தில் உருவாகும் சூழலை ஏற்படுத்த வேண்டும். உயிரியல் கட்டுப்பாடு என்ற முடிவுக்கு வந்துவிட்ட பிறகு, பூச்சிக்கொல்லிகளைக் கையால்கூடத் தொடக் கூடாது. பூச்சிக்கொல்லி, நன்மை செய்யும் பூச்சிகள் உருவாகும் அத்தனை சூழலையும் அழித்துவிடும். உயிரியல் கட்டுப்பாடு என முடிவு செய்துவிட்டால் முதல் வேலை, ரசாயன இடுபொருள்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றின் பயன்பாட்டை நிறுத்துவதுதான்.
வயலில் உள்ள தீமை செய்யும் பூச்சிகளுக்கு எதிரான ஒட்டுண்ணிகள் அல்லது இரைவிழுங்கிகளைப் பயன்படுத்துவது என முடிவு செய்துவிட்டால் அதற்குரிய காலச் சூழ்நிலை, பருவநிலை மாற்றம், அதன் வளர்ச்சி, செயல்பாடு மற்றும் இனப்பெருக்க விகிதம் போன்றவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். உயிரியல் கட்டுப்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் மற்றொன்று, இனக்கவர்ச்சிப் பொறி. அமெரிக்கன் காய்ப்புழு எனப்படும் பருத்தியைத் தாக்கும் பச்சைக் காய்ப்புழுவின் ஒரு ஆண்பூச்சி, ஒரு நாளைக்கு 16 பெண் பூச்சிகளுடன் இணைசேரும். ஒவ்வொரு பெண் பூச்சியும் 100 முதல் 200 முட்டைகள்வரை இடும். பெண் பூச்சியின் வாசனையை வைத்து, இனக்கவர்ச்சிப் பொறி மூலமாக, ஒரு ஆண் பூச்சியைக் கவர்ந்து அழித்தால், சுமார் ஆயிரம் புழுக்கள் உருவாவது தடுக்கப்படும்.
விளக்குப்பொறிக்கு ஆண் பூச்சி, பெண் பூச்சி என்ற எந்தப் பாகுபாடும் கிடையாது. அனைத்துவிதமான பூச்சிகளும் ஒளியை நோக்கி நகரும் தன்மை வாய்ந்தவை. மழை பெய்த அன்று இரவு கதவுகளைத் திறந்து வைக்க முடியாத அளவுக்குப் பூச்சிகள் அதிகமாக இருக்கும். மழை பெய்த அன்று இரவு பெரும்பாலான பூச்சிகள், கூட்டுப்புழுப் பருவத்திலிருந்து வெளியே வந்துவிடும். அன்று இரவு வீட்டில் போடும் விளக்கு அனைத்துப் பூச்சிகளையும் ஈர்க்கும். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான் வயலில் விளக்குப்பொறிச் செயல்படுகிறது.
-பறக்கும்
இதுதான் அலாரம்!
பெரோமோன் எனப்படும் பூச்சிகளால் சுரக்கப்படும் வேதியியல் பொருள்தான் பூச்சிகளுக்கு இடையேயான தகவல் தொடர்புச் சாதனம். பெண் பூச்சியின் வாசனையை வைத்து, ஆண் பூச்சிகளை அழிப்பது செக்ஸ் பெரோமோன் எனப்படுகிறது. அசுவினியில் இது வேறுவிதமாக வேலை செய்கிறது. இலைக்குப் பின்பகுதியில் கும்பல் கும்பலாகத்தான் அசுவினி இருக்கும். அசுவினியைப் பார்த்தவுடன் நமக்குப் பொறிவண்டு நினைவுக்கு வரும். உடனே பொறிவண்டை அந்த வயலில் இறக்கி விடுகிறோம். அது களத்தில் இறங்கி, இலைக்குப் பின்னால் இருக்கும் அசுவினியை உண்ணத் தொடங்குகிறது.
அசுவினிபூச்சி உடம்பின் பின்பகுதியில் இரண்டு குழாய் போன்ற அமைப்பு இருக்கும். அதன் வழியாகத்தான் தேன் போன்ற திரவம் வெளியே வரும். அது சாதாரணமாக இலையை உறிஞ்சி தின்றால் தேன் சொட்டுத் திரவம் வெளியே வரும். ஆனால், எதிரிகளால் தாக்கப்படும்போது அந்தக் குழாய் வழியாகத் தேன்சொட்டுடன், ஒரு ரசாயன திரவமும் வரும். அந்தத் திரவம், ‘என்னைத் தாக்குகிறார்கள். ஓடிவிடுங்கள்’ எனச் சமிக்ஞை தெரிவிக்கும். அடுத்த நொடி அத்தனை அசுவினிகளும் சிட்டாகப் பறந்துவிடும். இதுதான் அலாரம் பெரோமோன்.
எறும்பு ஓர் இடத்தில் ஜாடி நிறையச் சர்க்கரையைக் கண்டுபிடிக்கிறது. அது உடனே தனது இடத்துக்கு வந்து, ‘நமக்கான உணவைக் கண்டுபிடித்திருக்கிறேன். வாருங்கள்’ எனச் சகாக்களைக் கூட்டிச்செல்லும். எறும்புகள் ஓர் இடத்துக்குப் போகும்போதே அதன் பின்புறத்தைத் தரையில் வைத்து உரசிக்கொண்டே செல்லும். அதிலிருந்து ஒரு வாடை வரும். அதுதான் எறும்புகளின் ஜி.பி.எஸ். மீண்டும் அதே பாதையில் திரும்ப, அந்த வாடை உதவும். வாடையை முகர்ந்து பார்த்துக்கொண்டே முதல் எறும்பு செல்லும். அடுத்த எறும்பு தனது பின்புறத்தை அதே வழியில் தடவிக்கொண்டே போகும். அதற்கு அடுத்தடுத்த எறும்புகள் அதன் வாசனையை நுகர்ந்துகொண்டே செல்லும். இதனால்தான் எறும்புகள் வரிசையாகச் செல்கின்றன. இதற்குப் பெயர் டிரையல் பெரோமோன்.
தேன்கூட்டில் இருக்கும் அனைத்துவிதமான தேனீக்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, ராணித் தேனீ வைத்திருக்கும் ஒருவித சமூகக் கட்டமைப்புக்கான பெரோமோன்
நன்றி:விகடன்