எதெல்லாம் அயல் மாடு?
ஜெர்சி
உள்நாட்டு மாட்டினங்களின் எதிர்காலம் குறித்த சர்ச்சை தற்போது பெரிதாகி இருக்கிறது. இந்நிலையில் நம்மைச் சுற்றி இன்றைக்கு வாழும் பால் மாடுகள் நாட்டு மாடுகள் இல்லை. பெரும்பாலானவை இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மாட்டினங்கள் அல்லது அவற்றின் கலப்பினங்கள். தமிழகத்தில் பெருமளவு காணப்படுவது ஜெர்சி வகைக் கலப்பினமே.
வெண்மைப் புரட்சியின் ஒரு பகுதியாக 40 ஆண்டுகளுக்கு முன் அயல்நாட்டு மாட்டினங்கள் கொண்டுவரப்பட்டன. இந்தியாவின் மலைப்பகுதிகளில் நிலவும் குளிரால், அந்தப் பகுதிகளில் வாழக்கூடிய ஹோல்ஸ்டீன் ஃபிரீசியன் மாட்டினம் வளர்க்கப்பட்டது. அதேநேரம் வெயிலுக்குத் தாக்குப்பிடித்த ஜெர்சி வகை, தென்னிந்தியாவிலும் சமவெளிப் பகுதிகளிலும் காலூன்றியது. அதன் கலப்பினங்கள் இங்கே பரவலாகின. இன்றைக்கு நாம் பார்க்கும் பெரும்பாலான செம்பட்டை நிறத்திலான மாடுகள், ஜெர்சி கலப்பின வகைகளே.
அதற்குப் பிறகு, ஜெர்சி, ஹோல்ஸ்டீன் ஃபிரீசியன், பிரவுன் ஸ்விஸ் ஆகிய வெளிநாட்டு மாட்டினங்களுடன் இந்திய மாடு வகைகள் கலப்பினம் செய்யப்பட்டன. இந்தியக் கால்நடைப் பல்கலைக்கழகங்கள் வழியாக அறிமுகமான இந்த நடைமுறை, பின்னர்ப் பிரபலமடையத் தொடங்கியது.
பால், இறைச்சி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடனே வெளிநாட்டு மாட்டினங்களின் கலப்பினம் உருவாக்கப்பட்டது. ஆனால், இதனால் ஏற்படும் பின்விளைவுகள் கணக்கில் கொள்ளப்படவில்லை என்றே சொல்ல வேண்டும்.
வெப்பத்தைத் தாங்குதல், நோய் தடுப்பாற்றல், குறைந்த தீவனம், சொரசொரப்பான தீவனம் ஆகியவற்றுக்கு வெளிநாட்டு மாடுகளும், அவற்றின் கலப்பினங்களும் முழுமையாகத் தாக்குப்பிடிக்கவில்லை. கலப்பினமாகப் பிறக்கும் புதிய மாடுகளின் இனப் பெருக்கத் திறனும் சற்றுக் குறைந்தே காணப்படுகிறது.
கலப்பின மாடுகளை வளர்ப்பதிலும் பராமரிப்பதிலும் இது போன்று நிறைய சிக்கல்கள் உள்ளன. அவற்றில் பலவும் இன்றும் தொடரவே செய்கின்றன. கலப்பின மாடுகளுக்கு அதிக அளவில் தீவனமும் பல்வேறு வகைப்பட்ட தீவனமும் தேவை. அவை எளிதில் நோய் தாக்குதலைச் சந்திக்கக் கூடியவை. அவற்றின் கருத்தரிக்கும் விகிதம் குறைவு என்பதால் செயற்கை கருவூட்டலை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டியிருக்கிறது.
இது மட்டுமில்லாமல் நாய்களில் பல்வேறு இனங்கள் கலந்து, அடிப்படை தாய்-தந்தை இனம் எதுவென்றே தெரியாத பல்முனை கலப்பினம் உருவாகிவிட்டதைப் போல, மாடுகளிலும் பல்வேறு இனங்கள் கலந்த கலப்பின வகைகள் இந்தியாவில் உண்டு.
ஜெர்சி
தோன்றிய இடம்: ஆங்கிலக் கால்வாய் பகுதியில் ஃபிரான்ஸ் கடற்கரை அருகேயுள்ள ஜெர்சி தீவில் உருவான மாட்டினம்.
அறியப்பட்டதற்குக்காரணம்: பாலில் உள்ள அதிகக் கொழுப்புத்தன்மைக்காகப் பெயர் பெற்றது.
தனித்தன்மைகள்
# மிகவும் பழமையான பால் மாட்டினமான இது வெளிநாட்டு பால் மாடுகளில் குட்டையானது.
# ஆறு நூற்றாண்டுகளுக்குக் கலப்பு இல்லாமல் வளர்ந்துவந்தது.
# மிகவும் லேசான சாம்பல் நிறம்-எலி நிறம் முதல் செம்பட்டை நிறம் அல்லது கறுப்பு நிறத்திலும்கூட இருக்கும்.
# காளைகளுக்கும் பசுக்களுக்கும் உடல் பகுதிகளைவிட இடுப்பு, தலை, தோள் பகுதிகள் மிகவும் அடர்த்தியான நிறத்தில் இருக்கும்.
# 26-30 மாதங்களில் கன்று ஈனத் தொடங்கும்.
# 13-14 மாதங்களுக்கு இடையில் மறுபடியும் கருத்தரிக்கும்.
# தூய ஜெர்சிகள் ஒரு நாளைக்கு 20 லிட்டர்வரை பால் தரும். கலப்பின ஜெர்சிகள் ஒரு நாளைக்கு 8-10 லிட்டர்வரை பால் தரும்.
# 5.3 சதவீதக் கொழுப்பு, 15 சதவீதச் சாச்சுரேடட் இயற்கை கொழுப்பை (SNF) தரக்கூடியது.
# இந்தியாவில் நாட்டு மாடுகளுடன் பெருமளவில் கலப்பினம் செய்யப்பட்டு, இந்த ஜெர்சி கலப்பின மாடுகளே தற்போது பரவலாக உள்ளன.
பிரச்சினை: இந்தியாவின் வெப்பமான, ஈரப்பதம் மிகுந்த தட்பவெப்பநிலை இதற்குப் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஹோல்ஸ்டீன் ஃபிரீசியன்
தோன்றிய இடம்: ஹாலந்தின் வடக்கில் உள்ள ஃபிரீஸ்லாந்தை சேர்ந்ததால் இந்தப் பெயர் பெற்றது.
அறியப்பட்டதற்குக்காரணம்: அதிகப் பால் கொடுப்பதற்காக அறியப்பட்டது. உலகப் பால் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் மாட்டினம். அமெரிக்காவில் மிக அதிகமாக இருக்கும் மாட்டினமும்கூட.
தனித்தன்மைகள்
# இந்த மாட்டினம் வெளிநாட்டு பால் மாடுகளிலேயே மிகவும் பெரியது. சில வளர்ந்த மாடுகள் 700 கிலோவரை எடையுடன் இருக்கும்.
# பொதுவாகக் கறுப்பு-வெள்ளை, சிவப்பு-வெள்ளை கலந்த நிறத்தில் காணப்படும்.
l 15 மாதங்களில் பிறக்கச் செய்யலாம்.
# 24-27 மாதங்களில் முதல் கன்றை ஈனத் தொடங்கும்.
# வெளிநாட்டு மாடுகளில் அதிகப் பால் கொடுக்கும் வகையாகக் கருதப்படுகிறது. ஒரு நாளைக்கு 25 லிட்டர் பால் தரும்.
# அதேநேரம் இதன் கலப்பினம் 10-15 லிட்டர் பாலை தினசரித் தரும்.
# இந்த மாட்டினத்தின் பாலில் கொழுப்புச்சத்து 3.45 சதவீதமே இருக்கும்.
பிரவுன் ஸ்விஸ்
தோன்றிய இடம்: ஸ்விட்சர்லாந்தின் மலைப்பகுதியில் உருவான இந்த இனம், பால் உற்பத்திக்காகப் புகழ்பெற்றது.
தனித்தன்மைகள்
ஹரியாணா மாநிலம் கர்னாலில் உள்ள தேசியப் பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் (என்.டி.ஆர்.ஐ.) கரண் ஸ்விஸ் கலப்பினத்தை உருவாக்கும் முயற்சி
1963-ல் தொடங்கியது. சாஹிவால், சிவப்பு சிந்தி ஆகிய வடஇந்திய மாடுகளுடன் ஸ்விஸ் மாடு கலப்பு செய்யப்பட்டு, புதிய கலப்பினம் உருவாக்கும் முயற்சி நடைபெற்றது. வட இந்தியாவில் கரண் ஸ்விஸ் என்ற பெயரில் இந்தக் கலப்பின மாடுகள் காணப்படுகின்றன.
ஆதாரம்: http://bieap.gov.in/DairyAnimalManagementTheory.pdf
National Dairy Development Board
நன்றி தி இந்து