யார் வில்லன்: பூச்சியா பூச்சிக்கொல்லியா? – புரிந்துகொள்ள உதவுகிறார் ‘பூச்சி‘ செல்வம்
நமது மூதாதையர்களின் வேளாண்மை சுயசார்புடையது. வாழும் பகுதியின் மண், நீர் வளத்தை அடிப்படையாகக் கொண்டு அவற்றுக்கு ஊறு விளைவிக்காமல், தங்கள் உணவுத் தேவையை நிவர்த்தி செய்துகொண்டுவந்தனர். தொழிற்புரட்சிக்குப் பின்னர் உலகெங்கும் காடுகள் ஒருபுறம் அழிக்கப்பட்டன, பசுமைப்புரட்சியின் பெயரால் அதிக விளைச்சல், அதிக லாபம் என்று கவர்ச்சிகரப் போக்குகள் வேளாண்மையில் மற்றொருபுறம் திணிக்கப்பட்டன. ‘அதிக விளைச்சலுக்கு எதிரி’ என்ற முத்திரையுடன் பூச்சிகளுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் அங்குதான் தொடங்கி வைக்கப்பட்டது.
உயிர்க்கொல்லிகள்!
உலகப் போர்களில் மனித உயிர்களைக் கொல்வதற்காக வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து மூலப்பொருட்களிலிருந்தே பின்னாளில் செயற்கை உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் தயாரிக்கப்பட்டன. இந்தப் பூச்சிக்கொல்லிகள் பயிர்களைப் பாதிக்கும் பூச்சிகளைக் கொல்வதைவிட, வேளாண் விளைபொருட்களை உண்ணும் மனிதரை மெல்லக் கொல்லும் விஷமாக மாறிவருகின்றன என்பது சமீபகால ஆராய்ச்சிகளில் இருந்து தெரியவருகிறது. இப்படி உயிர்க்கொல்லிகளாக உருவெடுத்திருக்கும் பூச்சிக்கொல்லிகளைத் தொடர்ந்து பயன்படுத்தவும் முடியாது, கைவிடவும் வழியின்றி இன்றைய விவசாயிகள் தடுமாறுகிறார்கள்.
அவர்களுக்கு உதவும் வகையில் பூச்சிகளை முழுமையாகப் புரிந்துகொள்வது முதல் பூச்சிகள் ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து விடுபடுவதுவரை வழிகாட்டுகிறார், தூத்துக்குடியில் வேளாண் துறை அலுவலராகப் பணியாற்றும் நீ. செல்வம்:
பூச்சிகளின் பிரம்மாண்ட உலகு
மனிதர்களைவிட பரிணாமத்தில் பல மடங்கு மூத்தவை பூச்சியினங்கள். அளவில் சிறிதானாலும் பூச்சிகளின் உருமாற்றம், இனப்பெருக்கம் என அவற்றின் பிரம்மாண்ட உலகு விசித்திரமானது. முட்டை, புழு, கூட்டுப்புழு, தாய்ப்பூச்சி என நான்கு உருமாற்ற நிலைகளைக் கொண்டது பூச்சியின் வாழ்க்கை சுழற்சி. இந்த நான்கில் வெளியே தெரியும் புழு, பூச்சிக்கு எதிராகவே அதிகப் பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தும்போது ஏனைய இரண்டு நிலைகளில் இருப்பவை புதிய நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெறுகின்றன.
இதனால் அவை அடுத்த வளர்ச்சி நிலைகளை எட்டும்போது, அவற்றை அழிப்பதற்கு முன்பைவிட வீரியமான பூச்சிக்கொல்லிகள் அவசியமாகிறது. பூச்சியினங்கள் ஈனும் முட்டைகளின் எண்ணிக்கை மிக அதிகம். இந்த முட்டைகளில் இரண்டு சதவீதம் மட்டுமே முழு பூச்சிகளாகின்றன. பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டால், முட்டைப் பூச்சியாகும் சதவீதமும் படிப்படியாக அதிகரித்துவருகிறது.
கொசுவிரட்டி உதாரணம்
பூச்சிக்கொல்லிகள் பயனளிக்காததற்கு எளிமையான உதாரணம், நாம் பயன்படுத்தும் கொசுவிரட்டி மருந்துகள். கொசுக்களை அழிக்காமல் அவற்றை விரட்ட மட்டுமே செய்யும் இந்த வேதிப்பொருட்களால், அவை பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்ட 75 ஆண்டுகளில் கொசுக்களின் எதிர்ப்புத்திறன் கூடிக்கொண்டே செல்வது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கேற்பக் கொசுவிரட்டி மருந்துகளின் நச்சு வீரியத்தை அதிகரித்துவருகிறார்கள். இவற்றின் விளைவாகக் கொசு மட்டுமன்றி ஏராளமான பூச்சியினங்களின் எதிர்ப்புத்திறன் வளர்க்கப்பட்டுவிட்டது என்பது அதிர்ச்சிகர ஆராய்ச்சி முடிவு.
களம் தந்த கலப்பினங்கள்
நமது மரபான நெற்பயிர் ரகங்கள் ஐந்து அடிக்கும் மேலான உயரத்துடன், கரும்பு சோகையில் இருப்பது போன்ற சுணையுடன் வளரக்கூடியவை. ஆனால், பிலிப்பைன்ஸிலிருந்து இறக்குமதியான குட்டை ரகங்களோ, பூச்சிகள் ஊறுவதற்கு வசதியாகச் சுணையற்று இருந்தன. பொதுவாகவே நிறங்களைக் கண்டறிவதில் குறைபாடுள்ள பூச்சிகள், செயற்கை உரப் பயன்பட்டால் கலப்பின ரகங்களில் உருவாகும் அடர் பச்சை நிறத்தால் அதிகம் ஈர்க்கப்பட்டன. இந்தக் காரணங்களால் பூச்சிகளைப் பெருகவிட்டு, பின்னர் அவற்றை அழிப்பதற்குப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்துக்கு வலிந்து தள்ளப்பட்டோம்.
பன்மயச் சூழல் குலைப்பு
உணவு உற்பத்தியாளர்களான தாவர இனங்கள், அவற்றை உண்டு வாழும் உயிரினங்கள் ஆகியவற்றை மட்டும் பூச்சிக்கொல்லிகள் பாதிப்பதில்லை. இறுதியில் அனைத்தையும் மட்க வைக்கும் சிறப்புத்திறன் பெற்ற மண்ணில் இருக்கும் நுண்ணுயிர்களையும் பூச்சிக்கொல்லிகள் அழித்து விடுகின்றன. செத்தவற்றை மட்கச்செய்து, உயிருள்ள விதையை முளைக்கச் செய்யும் மண்ணின் மகத்தான பணி இதனால் சீர்கெடுகிறது. அந்த வகையில் வேளாண்மைத் தொழில் எதிர்கொள்ளும் மிகப் பெரும் சவாலைப் பூச்சிக்கொல்லிகள் உருவாக்கிவிட்டன.
எல்லாமே வில்லன் அல்ல!
பயிர்ச் சூழலில் பூச்சிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. காடுகள் அழிக்கப்பட்டு வயல்களாக மாற்றப்பட்டதற்காக, பூச்சிகள் தமது வாழிடத்தை மாற்றிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாமா? அதேபோல வயலில் குடிகொண்ட பூச்சி ரகங்கள் அனைத்துமே விவசாயிக்கு வில்லன்கள் அல்ல. மொத்தப் பூச்சி ரகங்களில் 20 முதல் 40 சதவீதம் மட்டுமே, ரகத்தைப் பொறுத்து பயிரைப் பாதிக்கக்கூடியவை. ஏனையவை பயிரைப் பாதிக்கும் பூச்சிகளை உணவாகக் கொள்ளும் ‘நல்ல பூச்சிகள்’. பூச்சிக்கொல்லிகளால் அனைத்துப் பூச்சிகளும் அழிக்கப்படுவதால், அயல் மகரந்தச்சேர்க்கை அடையாளம் இழந்துபோகிறது. தேனீக்களால் கிடைக்கும் தேன் அருகிப்போகிறது. அரக்கு, பட்டு உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
நன்மை செய்யும் கும்பிடு பூச்சியுடன் செல்வம்
கூட்டிக் கழித்து பார்த்தால்…
நல்ல பூச்சிகளுக்கு இடையூறு விளைவிக்காமல் கெட்ட பூச்சிகளை அகற்றுவதே புத்திசாலித்தனமான வேளாண்மை. நமது மூதாதையர்கள் இயற்கையோடு இயைந்து, அப்படித்தான் வேளாண்மை செய்துவந்தார்கள். நாமோ அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகளுக்காக மிக அதிகம் செலவழிக்கிறோம். இதனால் விளைச்சல் கணிசமாக உயர்ந்தாலும், கடைசியாகக் கூட்டிக் கழித்துப்பார்த்தால் நிகர லாபத்தில் அடிவாங்கிவிடுகிறது.
அதாவது மூதாதையர்கள் ரூ. 3 செலவழித்து ரூ.10 எடுத்ததைவிட, நாம் ரூ.10 செலவழித்து ரூ. 20 எடுப்பதை வேளாண் வளர்ச்சி என்கிறோம். இதில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி மண், நீர், காற்று என மொத்த உயிர்ச்சூழலும் பாழாவதால் ஏற்படும் நஷ்டத்தை வசதியாக மறந்து விடுகிறோம்.
நரம்பில் நஞ்சேறுகிறது
பயிர்களைப் பாதிக்கும் பூச்சிகளின் நான்கு வாழ்க்கை நிலைகளையும் ஒருசேர அழிக்கும் பூச்சிக்கொல்லிகள், இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் நாளுக்கு நாள் பூச்சிக்கொல்லிகளின் நச்சு வீரியம் அதிகரித்தேவருகிறது. முதல் தலைமுறை பூச்சிக்கொல்லிகள் மனிதர்களின் தோல்பரப்பை மட்டுமே பாதிக்கும் தொடு நஞ்சாக இருந்தன. இரண்டாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகள் உடலுக்குள் ஊடுருவிக் குடல்வரை பாதித்தன. தற்போது ஐந்தாம் தலைமுறையாகப் பயன்பாட்டில் இருப்பவை நரம்பைப் பாதிக்கும் நஞ்சு அடங்கிய பூச்சிக்கொல்லிகள்.
மேலாண்மையே சிறந்தது
பூச்சிகளுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்ட போராட்டத்தின் ஆரம்பம், பூச்சிகளை முற்றிலும் அழித்தொழிப்பதாக இருந்தது. அது நடைமுறையில் சாத்தியமற்றது என்பதை உணர சில பத்தாண்டுகள் பிடித்தன. எனவே, ‘பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது’ என்ற உத்தியில் அடுத்த சில பத்தாண்டுகள் சென்றன. பூச்சிகளைப் புரிந்துகொண்ட பிறகே ‘பூச்சி மேலாண்மை’ என்ற தெளிவான வியூகத்துக்கு உலக நாடுகள் வந்துள்ளன. இந்த வகையில் பயிரைப் பூச்சிகள் பாதிக்காமல் இருக்க, நடைமுறைக்கு ஒத்துவரும் மேலாண்மை பின்பற்றப்படுகிறது. இந்த மேலாண்மையில் ரசாயனப் பூச்சிக்கொல்லிகளுக்கு இடமில்லாமல் செய்கிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயற்கை வழியில் விரட்டலாம்
பூச்சி மேலாண்மையில் முதலாவது, முள்ளை முள்ளால் எடுப்பது!. பயிருக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளை அழிக்கும் நல்ல பூச்சிகளுக்கு இடம் தர வேண்டும். ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்துவிட்டு, இயற்கை வேளாண் முறைக்குத் திரும்பினால் வயலில் நல்ல பூச்சிகளின் வருகை அதிகரிக்கும். கெடுதல் செய்யும் பூச்சிகளைத் தடுக்க, வயலுக்கு வெளிவட்டத்திலேயே அவற்றை ஈர்த்துத் தடுக்கும் பயிர்களை வளர்க்க வேண்டும்.
இந்த வகையில் தட்டைப் பயிர்களை ஊடுபயிராக விளைவிக்கலாம். நன்மை செய்யும் பூச்சிகளான குளவி ரகங்களை ஈர்க்கும் மஞ்சள் உள்ளிட்ட அடர்த்தியான வண்ணங்கள் கொண்ட பூச்செடிகளைப் பயிரிடலாம். ஆங்காங்கே கம்பு, சோளம், மக்காச்சோளம் போன்ற உயரமான பயிர்களை வளர்க்கலாம். வயலின் வெளிவட்டத்திலும் இந்த உயரச் செடிகளைப் பயிரிடுவதோடு, எட்டடிக்கு ஒரு செடி வீதம் ஆமணக்கையும் பயிரிட வேண்டும்.
அடுத்ததாகப் பயிர்ப் பரப்பில் கசப்பை அதிகப்படுத்துவதன் மூலம் பூச்சிகளை அண்ட விடாமல் செய்யலாம். வேப்பங்கொட்டை கரைசல், மூலிகை பூச்சிவிரட்டிகள், ஐந்து இலைக் கரைசல், பச்சைமிளகாய் – இஞ்சிப்பூண்டு கரைசல் ஆகியவை பரிசோதனை அடிப்படையில் பூச்சிகளை விரட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில பூச்சிகள் அதிகமாகும்போது அவற்றைக் கட்டுப்படுத்த விளக்கு பொறி, இனக்கவர்ச்சி பொறி போன்றவற்றை வைக்கலாம். பூச்சிக்கொல்லிகளைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டே வந்து, ஐந்து ஆண்டுகளில் முழுமையாக இயற்கை வேளாண்மைக்கு மாறிவிட முடியும்.”
நடைமுறை அனுபவம் தரும் ஆதாரத்துடன் முடிக்கிறார் ‘பூச்சி‘ செல்வம்.
இயற்கை வழியில் முன்னேறும் தமிழகம்
இந்தியாவில் பூச்சிக்கொல்லி இல்லாத முதல் மாநிலம் சிக்கிம்! இரண்டாவது இடத்துக்குத் தமிழ்நாடு முன்னேறிவருவது மகிழ்ச்சி தரும் விஷயம். தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டு, அரசின் கொள்கை முடிவாக முன்னெடுக்கப்படும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மாதிரிக் கிராமங்கள் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 150 கிராமங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டில் முதல் கட்டமாக ரூ. 1 கோடி மதிப்பீட்டில் 20 மாவட்டங்களில் உள்ள 100 கிராமங்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பூச்சி மேலாண்மை மூலம் வெற்றிகரமான வேளாண்மைக்குத் திரும்ப விரும்பும் விவசாயிகள், தங்கள் பகுதியில் நடைபெறும் வயல்வெளி களப்பயிற்சியில் பங்கேற்பது நல்லது.
வேளாண் அதிகாரி பூச்சி செல்வத்தைத் தொடர்புகொள்ள: selipm@yahoo.com
9443538356
நன்றி