கோழிகளுக்கும் கொடுக்கலாம் பஞ்சகவ்யம்
இணையரின் முதன்மைத் தொழில் முட்டைக்கோழி வளர்ப்பு. முட்டைக்கோழி வளர்ப்பில் அடிப்படையானது அதன் தீவனம். பெரும் பகுதி செலவு, தீவனத்துக்கே சென்றுவிடும். எனவே, எவ்வளவுக்கு எவ்வளவு தீவனச் செலவைக் குறைத்து மாற்று உணவைக் கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு ஒருவருக்கு லாபம் கிடைக்கும். அடுத்த சிக்கல் நோய். பெரிய அளவிலான பண்ணைக் கோழிகள் எதிர்கொள்ளும் நோய்களால் இறப்பு சதவீதம் மிக அதிகமாக இருக்கும். இதனால் பண்ணை பெரிய அழிவை நோக்கிச் சென்றுவிடும். எனவே, உணவிலும் நோயிலும் கோழிப் பண்ணையாளர் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.
இதிலும் நாம் கவனிக்க வேண்டிய செய்தி, உணவு தவறானால் நோய் வரும், உணவு சரியாக இருந்தால் அதுவே மருந்தாக மாறும். இந்த நுட்பத்தைப் புரிந்துகொண்டு செயல்பட்டாக வேண்டும். பொதுவாக வெளியிலிருந்து வாங்கும் வேதிப்பொருட்களால் செறிவூட்டப்பட்ட உணவு, கோழிகளின் நோய் எதிர்ப்பாற்றலைக் குறைந்து இறப்பு எண்ணிக்கையை அதிகமாக்கிவிடும். எனவே, நோய் எதிர்ப்பு கொண்ட உணவைக் கொடுக்கும்போது கோழிகள் நல்ல உடல்நலத்துடனும், திடமாகவும் காணப்படும். நோய் தாக்குதல் குறைவாகவும் இருக்கும்
.ஊட்டமான கோழிகள் ஊட்டமான முட்டை
மதியழகன், தனது கோழிப் பண்ணைக்கான தீவனத்தை அவரே தயாரித்துக்கொள்கிறார். அதற்கென்று தனியாக ஒரு அரரை எந்திரத்தை அமைத்துள்ளார். அவரே நேரடியாகக் கொள்முதல் செய்யும் தானியங்களுடன், பலவிதமான மூலிகைகளை அந்த எந்திரத்தில் சேர்த்து அரைக்கிறார். அந்த உணவே கோழிகளுக்குக் கொடுக்கப் படுகிறது. அத்துடன் மாடுகளிடம் இருந்து கிடைக்கும் சாணம், சிறுநீர், பால், தயிர், நெய் ஆகியவற்றுடன் சர்க்கரை, இளநீர் போன்ற இனிப்புகளைச் சேர்த்து நொதிப்புச் சாற்றை (பஞ்சகவ்யம்) தயாரித்துக்கொள்கிறார். அந்தச் சாறு கோழிகளின் செரிமான ஆற்றலைக் கூட்டி, அதிக அளவு தீவனத்தை உட்கொள்ள உதவுகிறது.
இவரது பண்ணையில் கோழிகளின் தீவனச் செரிமாற்ற விழுக்காடு (feed conversion ratio) அதிகமாக இருப்பதாகக் கூறுகிறார். அதாவது கொடுக்கப்படும் தீவனம் எந்த அளவுக்கு முட்டையாக அல்லது கறியாகக் கோழியால் மாற்றப்படுகிறதோ, அந்த அளவுக்குப் பயன் கிடைக்கும். இந்த அளவை, நொதிப்புச் சாறு அதிகரிப்பது எப்படி என்பதை அவர் விளக்குகிறார். இவரது முட்டை தரமாக இருப்பதால் சந்தையில் நல்ல விலைக்குப் போகிறது.
மதியழகன், செங்குட்டுவன்
உண்மையான மதிப்புக்கூட்டல் எது?
கோழிகளின் கழிவை, அதாவது சாணத்தைக் கொண்டு புழுக்களை உருவாக்குகிறார். கழிவை மிக விரைவாகப் புரதமாக மாற்றும் இயற்கை ஆற்றல் புழுக்களிடமே உள்ளது. அதாவது, பூச்சியினத்தைச் சேர்ந்த ஈக்கள் தங்களுடைய முட்டைகளைச் சாணம் போன்ற கழிவுகளில் இடுகின்றன. இந்தக் கழிவுகளை உண்ணக்கூடிய புரதமாக மாற்றும் திறன் புழுக்களுக்கே உள்ளது. குறிப்பாக, ஈக்களின் புழுக்கள் கோடிக்கணக்கில் பல்கிப் பெருகிக் கழிவைத் தின்று தீர்க்கின்றன.
இந்தப் புழுக்கள் அடுத்த கட்டமாக வேறு உயிரினத்துக்கு உணவாக மாற்றப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் அது மேலும் மதிப்பு கூட்டப்படும். இதுவே உண்மையான மதிப்புக் கூட்டல். அவ்வாறு புழுக்கள் மீன்களுக்கோ கோழிகளுக்கோ அல்லது புழு உண்ணும் வேறொரு உயிரினத்துக்குக் கொடுக்கப்பட்டால், அதை மனிதர்களோ மற்ற உயிரினமோ அடுத்த கட்டத்தில் உண்ண முடியும். எடுத்துக்காட்டாகச் சாணக்கழிவு புழுக்களாக மாறிய பின்னர், அவை மீன்களின் உணவாகும், பின்னர் மீன்கள் மனிதர்களின் உணவாகும்.
இந்த மாதிரியான அடுக்குமுறை மதிப்புக் கூட்டல், மிகப் பெரிய பொருளியல் உயர்வைக் கொண்டுவரும்.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com
மதியழகன்-செங்குட்டுவனைத் தொடர்புகொள்ள: 9442577431
நன்றி: ஹிந்து