பஞ்சகவ்யா தயாரிக்க நாட்டு பசுமாடு தேவையா?
வீட்டை விட்டு வெகு தொலைவில் உள்ள கடைக்குப்போய் மருந்து அதிக விலை கொடுத்து வாங்க மனம் உள்ளவருக்கு அருகில் கிடைக்கும் கழிவினை வாங்குவது ஒன்றும் பெரியதாக தென்படாது. மிகவும் எளிய பொருள் தான் பஞ்சகவ்யா. அது தயாரித்திட பச்சை பசுஞ்சாணம் 5 கிலோ, பசுமாட்டு சிறுநீர் 3 லிட்டர், பசும்பால் 2 லிட்டர், தயிர் 1 லிட்டர், நெய் – 1லிட்டர், நாட்டு சர்க்கரை 1 கிலோ, இளநீர் 3 லிட்டர், வாழைப்பழங்கள் 12 எண் தேவை. பச்சை பசு சாணி 5 கிலோவுடன் பசுமாட்டு நெய் 1 லிட்டரை கலந்து பிசைந்து ஒரு வாயகன்ற மண்பானையில் 4 அல்லது 5 நாட்கள் வைக்கவும். இதை தினம் இருமுறை அதாவது காலை மற்றும் மாலை வேளைகளில் நன்கு கலக்கவும்.
ஐந்தாவது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை நன்கு கலக்கி விடவும். கம்பி வலையில் வாயை மூடி நிழலில் வைக்கவும். தினம் இருமுறையோ அல்லது பல முறையோ நன்கு கலக்கி விடவும். இதனால் அதிக காற்றோட்டம் ஏற்பட்டு அபரிதமாக நுண்ணுயிர்கள் உற்பத்தி ஆகும் வாய்ப்பும் 15 நாளில் பஞ்சகவ்யா ரெடியாகும் வாய்ப்பும் உள்ளது. இதை ஆறு மாதம் வரை தினமும் கலக்கி விட்டு கெடாமல் பயன்படுத்தலாம். தண்ணீர் குறைத்து கெட்டியான மீண்டும் போதிய அளவு தண்ணீர் சேர்த்து கலக்கி வர வேண்டும்.
10 லிட்டர் நீரில் 300 மில்லி பஞ்சகவ்யா கலந்து கொண்டு இலைவழி உரம் அல்லது பயிர்க்கு, நேரடியாக ஊற்றுதல் மூலம் பலன்பெறலாம். கைத்தெளிப்பானில் தெளிக்கும்போது வடிகட்டி பயன்படுத்தவும். விசைத் தெளிப்பானின் அடைப்பானையுடன் குழாயின் நுனிப்பகுதியையும் பெரிதாகச் செய்து கொண்டால் அடைப்பின்றி தெளிப்பு சீராக வரும் பஞ்சகவ்யா 75 சதம் உரமாகவும் 25 சதம் பூச்சி மற்றும் நோய்கொல்லி மருந்தாகவும் வேலை செய்து நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. மேலும் விபரம் பெற 98420 07125 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
– டாக்டர் பா.இளங்கோவன்,
தோட்டக்கலை உதவி இயக்குநர், உடுமலை, திருப்பூர்.
நன்றி: தினமலர்