மண்ணுக்கு வலு சேர்க்கும் பசுந்தழை உரங்கள்
ரசாயன உரங்களால் மண்ணின் தன்மை நாளுக்கு நாள் மாறி வரும் நிலையில், பசுந்தழை உரம் மண்ணுக்கு தழைச்சத்தை அளித்து பசுமையான விவசாயத்துக்கு வழி வகுக்கிறது.
இதுகுறித்து திரூரில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தினர் கூறியது: பசுந்தாள், பசுந்தழை என்பது மண்ணுக்கு வளம் சேர்க்கும் இன்றிமையாத உரமாகும். மண்ணுக்கு தழைச்சத்தை அதிகளவில் கொடுக்கும் உரமாக பசுந்தாள், பசுந்தழை உரங்கள் உள்ளன.
பசுந்தாள் உரம் என்பது தக்கைப் பூண்டு, சணப்பை, மணிலா அகத்தி, கொளஞ்சி, நரிப்பயிறு ஆகியனவாகும்.
பசுந்தாள் என்பது சித்தகத்தி, கிளைரிசிடியா ஆகியனவாகும்.
பசுந்தழை உரம்: இலை தழைகளையும், புங்கம், வேம்பு, கிளைரிசிடியா, வேலிமசால், பூவரசு, ஆவாரை, எருக்கு, வாகை போன்ற இலைகளையும் வெட்டி வயலுக்கு இடுவது பசுந்தழை உரமாகும்.
சித்தகத்தி பருவம்: எல்லா பருவத்துக்கும் ஏற்றதாகும். குறிப்பாக மார்ச்- ஏப்ரல் மாதங்கள் சிறந்த பருவ காலமாகும். எல்லா மண் வகைகளுக்கும் ஏற்றதாகும்.
விதை அளவு: ஒரு ஹெக்டேருக்கு 30 முதல் 40 கிலோ விதை தேவைப்படும்.
விதை நேர்த்தி: குறிப்பிட்ட ரைசோபியம் நுண்ணுயிர் உரத்தை ஒரு ஹெக்டேருக்கு 5 பாக்கெட் என்ற அளவில் விதையுடன் கலந்து விதைக்க வேண்டும். கை விதைப்புக்கு 30 சென்டி மீட்டருக்கு 10 சென்டி மீட்டர் என்ற அளவில் இடைவெளி விட வேண்டும்.
இதற்கு உரங்கள், பயிர் பாதுகாப்பு அவசியமில்லை. தேவைப்படும் பட்சத்தில் புரனோபாஸ் ஒரு சதவீதத்தை பூ, காய் பருவத்தில் தெளிக்க வேண்டும்.
நீர்ப்பாசனம்: 15 நாள்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
அறுவடை: விதைத்த 45 முதல் 60 நாள்களில் மண்ணில் மடக்கி உழவு செய்ய வேண்டும்.
கிளைரிசிடியா: பொதுவாக மழைக்காலங்களில் இதை நடலாம். ஜூலை, ஆகஸ்ட் அல்லது செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இதன் நாற்றுகளை நடலாம்.
இது எல்லா மண் வகைகளிலும் வளரும் தன்மை உடையது.
வளர்க்கும் முறை: கிளைரிசிடியா விதைகள் அதிகளவில் கிடைப்பதில்லை. எனவே இதை பதியன் போட்டு நடவு செய்யலாம். நன்கு முற்றிய நிலையில் உள்ள குச்சிகளை சாணக் கரைசலில் நனைத்து நட வேண்டும். வரப்புகளின் ஓரங்களில் 2 மீட்டர் இடைவெளியில் நடலாம். வருடத்துக்கு இரண்டு முறை இதன் இலைகளை பறித்து பசுந்தழை உரமாக இடலாம்.
மழைக் காலங்களில் இலைகளையும், தண்டு பகுதிகளையும் அறுத்து உரமாக பயன்படுத்தும் போது மீண்டும் நன்கு வளர ஏதுவாகின்றது.
இதற்கு பயிர் பாதுகாப்பு, உரங்கள் அவசியமில்லை. இந்த முறையில் பயிரிட்டால் ஒரு வருடத்துக்கு ஒரு கிளைரிசிடியா செடியில் இருந்து 20 கிலோ தழைச்சத்து கிடைக்கிறது.
வைக்கோலும் உரம் தான்: நெல் அறுவடைக்குப் பின் வயலில் உள்ள தாள்களையும், வைக்கோலையும் உரமாக பயன்படுத்தலாம். நெல் வைக்கோலில் 6 சதவீத கந்தகச் சத்து, 1.37 சதவீத சாம்பல் சத்து, சிலிக்கான், 40 சதவீத கரிமம் ஆகிய சத்துகள் உள்ளன.
வைக்கோலை வயலில் மடக்கி உழுவதால் ஹெக்டேருக்கு 45 கிலோ தழைச்சத்தும், 7 முதல் 10 கிலோ மணிச்சத்து கிடைக்கிறது. மேலும் நிலத்தில் சாம்பல் சத்து, கந்தகச் சத்து, சிலிக்கான், மயில் துத்தம், இரும்புச் சத்து போன்ற நுண்ணூட்ட சத்துகளையும் மண்ணில் கூட்டுகிறது.
வைக்கோலை வயலில் ஒரு மாதத்துக்கு முன்பு இட்டு மக்க வைத்து உழுத பிறகே நெல் நடவு செய்ய வேண்டும். இதுபோல் விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்து தங்களது சாகுபடியை பெருக்கலாம் என்றனர்.
நன்றி
தினமணி