பாரம்பரிய விதைகளின் பாதுகாவலன்
காய், கனிகள், தானியங்கள், மூலிகைகள், மரங்கள் என நூறு வகை விதைகளை எந்த நேரத்திலும் கையில் வைத்திருக்கிறார் இயற்கை வேளாண் விவசாயி செந்தில்நாயகம். போகும் இடமெல்லாம் இந்த விதைகளைக் கையோடு மூட்டை கட்டி எடுத்துச் செல்லும் அவர், தான் சந்திக்கும் நபர்களிடம் இலவசமாகக் கொடுத்து அவற்றை விதைக்கவும் சொல்கிறார். அவரிடம் உள்ள அத்தனை விதைகளும் நம் மண்ணுக்குச் சொந்தமான பாரம்பரிய விதைகள் என்பதுதான் இதில் விசேஷமே.
விதை பரவல்
பட்டுக்கோட்டை அருகிலுள்ள மயிலங் கோட்டை செந்தில்நாயகத்தின் சொந்தக் கிராமம். கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகத் தஞ்சை, தென் மாவட்டங்களில் பள்ளி – கல்லூரி நாட்டுநலப் பணி திட்ட முகாம்களில் இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பு குறித்துத் தனது அனுபவங்களைப் பாடமாகச் சொல்லிவருகிறார் செந்தில்நாயகம்.
“இந்த மண்ணை வளப்படுத்தி இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு வளரும் தலைமுறையின் கையில்தான் இருக்கிறது. அதனால்தான் மாணவர்கள் மத்தியில் பேசுகிறேன். முகாம்களின் நிறைவில் அந்த மாணவர்களுக்குப் பூனைக்காலி விதையைக் கொடுத்து விதைக்கச் சொல்வேன். தாது விருத்தி லேகியம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பூனைக்காலி செடியின் இலைகள் மண்ணில் விழுந்து மக்கினால், மண்ணுக்கும் தாது சக்தி கிடைக்கும்’’ என்கிறார் செந்தில்நாயகம்.
கருவேலம் வேண்டாம்
விருப்பமுள்ளவர்களுக்கு இயற்கை விவசாய உத்திகளைச் சொல்லிக்கொடுக்கிறார். கிராமங்களில் இயற்கை உரம் தயாரிப்பது குறித்து மகளிர் குழுக்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அழிக்கும் இயக்கம் முழு வீச்சில் தொடங்கியிருக்கிறது. ஆனால், “சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக அழித்தால்தான் இங்கு வறட்சியைப் போக்க முடியும்’’ என்று பதினைந்து வருடங்களுக்கு முன்பே சுட்டிக்காட்டியவர் செந்தில்நாயகம்.
122 நெல் வகைகள்
சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் ஆறு இடங்களில் நான் உருவாக்கிக் கொடுத்த இயற்கை வேளாண் பண்ணைகள் இன்றைக்கு நல்ல மகசூல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. நமது பாரம்பரிய விதைகளைத்தான் இந்தப் பண்ணைகளில் பயன்படுத்துகிறார்கள்.
பாரம்பரிய விதைகளை நட்டால் உரம், பூச்சிக்கொல்லி தேவையில்லை. நம்முடைய வேளாண் ஆராய்ச்சியாளர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட மான்சாண்டோ விதைகளைத்தான் மாய்ந்து மாய்ந்து ஆராய்ச்சி செய்கிறார்கள்; நமது பாரம்பரிய விதைகளை ஆய்வுசெய்ய ஆட்கள் இல்லை. சுயமுயற்சியில் 122 வகையான பாரம்பரிய நெல் விதைகளை நான் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறேன் என்கிறார். நிச்சயம் சாதாரண விஷயமில்லை.
செந்தில் நாயகம், தொடர்புக்கு: 9965182001