முலாம்பழம் சாகுபடி
முலாம்பழம் இனிப்பு சுவையும் நறுமணமும் கொண்ட காய்கறிப் பயிராகும். வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் கொண்டது. முதிர்ச்சி அடையாத முலாம்பழம் – சமைப்பதற்கும் ஊறுகாய்தயாரிக்கவும் பயன்படுகிறது. பழங்கள் இனிப்பாக இருக்கும். பதப்படுத்தி ஜாம், ஜெல்லி தயாரிக்கலாம். இப்பழம் நீளம், உருண்டை, முட்டை வடிவத்தில் இருக்கும். ஆயுர்வேத மருத்துவத்தில் இப்பழம் உடலை குளிர்ச்சிப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது.
சாகுபடி நுட்பங்கள்:நல்ல வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான மண் ஏற்றது. 6 – 7.5 அமில காரத் தன்மையுள்ள மண்ணில் நன்கு வளரும். முலாம்பழம் நன்கு வளர்வதற்கு அதிக சூரிய ஒளி, குறைவான ஈரப்பதம், உறைபனி இல்லாத மிதமான வறண்ட சூழ்நிலையும் தேவை. 23-27டி. செல்சியஸ் வெப்பநிலை ஏற்றது.
முக்கிய ரகங்கள்அர்கா ராஜ்கான்ஸ், அர்கா ஜீட், பூசா சர்பதி, பூசா மதுரகஸ், பஞ்சாப் சன், துர்காபுரா மாது, ஜாப்நா 96-2 மற்றும் பஞ்சாப் ரசிலாஹெரி. அர்க்கா ராஜ்கான்ஸ் ரகம் உருண்டை வடிவமுள்ள காய்களைக் கொண்டது. காய்களின் மேற்பரப்பில் வலைகள் நன்றாக தெரியும். இவை வெள்ளை நிறத்திலும் அதிக அளவு சதைப்பிடிப்பும் கொண்டிருக்கும். இனிப்பு சுவையுடைய இவை ஒரு எக்டருக்கு 30-40 டன் வரை மகசூல் கொடுக்கும். சராசரியாக ஒரு காயின் எடை 1.0 முதல் 1.5 கிலோ வரை இருக்கும்.
பருவம்:
முலாம்பழம் டிசம்பர் முதல் ஜனவரி மாதங்களில் விதை விதைத்தால் கோடை காலத்திற்கு இவை விளைச்சலைக் கொடுக்கும். மானாவாரிப் பயிராக ஜூன் மாதத்திலும் விதைக்கலாம். நிலத்தை 3-4 முறை உழுது எக்டருக்கு 50 டன் மக்கிய தொழு உரத்தை இட்டு நிலத்தை பண்படுத்த வேண்டும். பின் 2 அடி (60 செ.மீ) அகலத்திற்கு நீளமான வாய்க்கால்களை 2 மீட்டர் இடைவெளியில் எடுக்க வேண்டும். வாய்க்கால்களின் பக்கவாட்டில் 45 x 45 x 45 செ.மீ. அளவுள்ள குழிகளை ஒரு மீட்டர் இடைவெளியில் தோண்டி உரங்களைப் போட்டு மண்ணுடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
ஒரு எக்டருக்கு தேவையான மூன்றரை கிலோ விதையுடன் 4 கிராம் / கிலோ விதை என்ற அளவில் சூடோமோனாஸ் அல்லது 2 கிராம் கார்பன்டசிம் சேர்த்து நன்கு கலக்கி விதைநேர்த்தி செய்ய வேண்டும். குழிகளின் மத்தியில் விதைகளை விதைத்து 15 நாட்கள் கழித்து குழிக்கு 2 நாற்றுக்களை மட்டும் விட்டு மீதியை நீக்கிவிட வேண்டும். விதை விதைப்பதற்கு முன் நீர் பாய்ச்ச வேண்டும். நட்ட மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
களை நீக்கம்:விதை விதைத்ததில்இருந்து 30 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். பொதுவாக 3 முறை களை எடுக்க வேண்டும்.
உர மேலாண்மை:55 கிலோ மணிச்சத்து, 55 கிலோ சாம்பல்சத்து என்ற அளவில் அடியுரமாக இடவேண்டும். நட்ட 50 நாட்கள் கழித்து 55 கிலோ தழைச்சத்து மேலுரமாக இடவேண்டும்.
பயிர் பாதுகாப்பு:இலை வண்டுகளைக் கட்டுப்படுத்த லிட்டருக்கு 1 மிலி மாலத்தியான் அல்லது 1 லிட்டருக்கு 2 கிராம் கார்பரில் கலந்து வாரத்திற்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். காய்ப் புழுக்களைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட காய்களைப் பறித்து அழித்துவிட வேண்டும். நிலத்தை நன்கு உழுது கூட்டுப்புழுக்களை சூரிய ஒளியில் நன்கு படுமாறு செய்து அவை அழிக்கப்பட வேண்டும்.
அறுவடை:
காய்களின் மேற்பரப்பிலுள்ள வலைகளுக்கு இடைப்பட்ட பகுதி மஞ்சள் நிறமாகவும், வலைகள் மங்கலான வெள்ளை நிறமாகவும் மாறும்போது அறுவடை செய்ய வேண்டும். ஒரு எக்டருக்கு 20-30 டன் விளைச்சல் 120 நாட்களில் கிடைக்கிறது