காஸ் பைப் லைன் திட்டம் : தமிழகத்தின் பெரும் பகுதி விவசாய நிலங்கள் பறிபோகிறது
எண்ணூர் முதல் மதுரை வரை 615 கி.மீ தூரத்துக்கு ராட்சத குழாய் அமைத்து காஸ் இணைப்பு கொண்டு செல்லும் திட்டம் இந்தியன் ஆயில் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இத் திட்டத்தின்படி திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல விளைநிலங்கள் மற்றும் புதுச்சேரி, திருச்சி வழியாக மதுரை வரை குழாய் போகும் பாதைகளில் விவசாய நிலங்கள் பறிபோக உள்ளது. இது விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
யாருக்கு நிலம் வேண்டுமானாலும் விவசாயிகள் நிலத்தில் கைவைப்பது வழக்கமாகி விட்டது; நாட்டு முன்னேற்றத்துக்கு இதுபோன்ற திட்டங்கள் நிச்சயம் வேண்டும்; இருந்தாலும், அதை விவசாயிகளின் வயிற்றில் அடித்துத்தான் செய்யவேண்டுமா? இது தான் விவசாயிகள் குமுறல். இத்திட்டத்தை எதிர்த்து பல கிராமங்களில் தன்னெழுச்சியாக விவசாயிகள் போராட்டங்களை நடத்த துவங்கி உள்ளனர். விவசாயிகளின் வாழ்வாதாரமான விளைநிலங்களை, திடீரென வந்து, ஒரு பெரிய திட்டத்துக்கு எடுத்துக்கொள்கிறோம் என்று சாதாரணமாக சொல்லும் போக்குதான் இருக்கிறது. இது விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளும் முடிவு என்பது கூட தெரியாத அளவில்தான் அதிகாரிகள் இருக்கிறார்கள்.
காஸ் பைப் லைன் அமைக்கும் பணிக்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் அதிகாரிகள், குழாய் செல்லும் பாதையை வெறும் இயந்திரத்தனமாக பார்த்து அளவீடு செய்து கொடுத்துவிட்டு போய்விடுவார்கள். ஆனால் அது பல ஏழை, எளிய விவசாயிகளின் ஜீவாதாரத்தை குலைக்கும் செயல் என்பது அவர்களுக்கு துளியும் தெரிவதில்லை. எனவேதான் இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளும்போது சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளின் கருத்து அறிவது முக்கியம். அதிகாரிகளுக்கே தெரியாத பல மாற்று வழிகளையும் ஏற்பாடுகளையும் சொல்கிற அளவுக்கு நில வரையறை அறிவு படைத்தவர்கள் விவசாயிகள் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் சுமார் 42 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள் உள்ளன. (2.5 ஏக்கர் சேர்ந்ததுதான் ஒரு ஹெக்டர்) தமிழக மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியே உள்ளனர். தற்போது காஸ் பைப் லைன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள எண்ணூர், வாயலூர், நெய்தவாயல், தேவதானம், காணியம்பாக்கம், வன்னிப்பாக்கம், சிறுவாக்கம் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் மட்டுமே சுமார் 24,301 விவசாயிகள் உள்ளனர். இப்பகுதியில் மட்டும் 14,750 ஹெக்டர் விவசாய நிலங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தை எண்ணூர் முதல் மதுரை வரை செயல்படுத்துவதால் தமிழகத்தின் பெரும்பகுதி விவசாய நிலங்கள் பறிபோகும் அபாயம் உள்ளது.
மக்கள் கருத்து முக்கியம்:
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு தலைவர் ஆர்.பாண்டியன் கூறியதாவது: ஏற்கனவே எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதி வழியாக விளைநிலங்களில் குழாய் மூலம் பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்கள் எடுத்து செல்ல மத்திய அரசு முடிவு செய்தபோது விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. விளைநிலங்களில் பெட்ரோல் எடுத்து செல்வதால் மண் வளம் பாதிக்கப்பட்டு உணவு சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்படும். தற்போது சென்னையிலிருந்து மதுரைக்கு குழாய் மூலம் காஸ் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.
இத்திட்டத்தை செயல்படுத்தினால் விளைநிலங்கள் பாதிக்கப்படும்.
இந்த விஷயத்தில் மத்திய அரசு சம்பந்தப்பட்ட அனைத்து விவசாயிகளையும் நேரில் அழைத்து நிலம் கையகப்படுத்தப்படுவது தொடர்பாகவும், திட்ட செயல்பாடு தொடர்பாகவும் அவர்களிடம் முழு விளக்கம் அளிக்க வேண்டும். பின்னர் அவர்களின் கருத்துக்களை பரிசீலித்து அதன்பிறகு இத்திட்டத்தை செயல்படுத்தினால் நல்லது. மாறாக, விவசாயிகளிடம் எந்த கருத்தும் கேட்காமல் விளைநிலங்களை கையகப்படுத்துவது தவறானது. ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டம் வழியாக விளைநிலங்களில் குழாய் மூலம் காஸ் கொண்டு செல்லப்படுவதால் அப்பகுதிகளில் பல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன் மக்களிடம் கருத்துக்களை கேட்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்றார்.
என்னென்ன பாதிப்பு?
விளைநிலங்கள் வழியாக குழாய் மூலம் காஸ் எடுக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் படிப்படியாக மண்வளம் குறைய ஆரம்பிக்கும். பின்னர் நாளடைவில் அந்த பகுதி உணவு சாகுபடி செய்ய முடியாத நிலமாக மாறும். குழாய்கள் பராமரிப்பில்லாத நேரங்களில் ஆங்காங்கே காஸ் லீக் ஏற்பட நேரிட்டால் மிகப் பெரிய தீவிபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுதவிர, காஸ் கசிவால் நிலத்தடிநீர் முற்றிலும் பாதிக்கப்படும்.
விவசாயிகள் தற்கொலை
கடும் வறட்சி மற்றும் நிலம் பறிபோதல் உள்ளிட்ட பல காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்வது இந்தியாவில் அதிகரித்துள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி கடந்த 1995 முதல் 2013 வரையிலான 18 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் மொத்தம் 2,84,694 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 3,313 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அதன்படி, 2012ல் 900 பேர், 2013ல் 1,100 பேர், 2014ல் 1,300 பேர் என மொத்தம் 3,313 ேபர் தற்கொலை செய்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு 46 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.
அங்கீகரிப்பது எப்போது?
அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் விவசாயத்தை மேம்படுத்தவும், விவசாயிகளை ஊக்குவிக்கவும் அந்நாடுகளில் விவசாயத்தை தொழிலாக அங்கீகரித்துள்ளனர். ஆனால் விவசாய நாடு என்று பெருமைபட்டுக்கொள்ளும் நம் மத்திய அரசு இதுவரை விவசாயத்தை தொழிலாக அங்கீகரிக்கவில்லை. இதுதொடர்பாக, விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இல்லை. இதனால் நாளுக்குநாள் விவசாயம் மற்றும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
அவரச சட்டம் என்கிற அரக்கன்
பாஜ தலைமையிலான மத்திய அரசு, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்து கொண்டு வர முயலுகிறது. ஆனால், ராஜ்ய சபாவில் அதற்கு போதிய பலம் இல்லாத காரணத்தால் இதுவரை அந்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறது. அவசர சட்டம் என்கிற அரக்கனை கொண்டு வரவிடாமல் ஒரு பக்கம் அரசியல் கட்சிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. மறுபுறம் அதை கொண்டு வந்தே தீருவோம் என்று மத்தியஅரசு மல்லுக்கட்டி வருகிறது. இந்த சட்டம் நிறைவேறினால்.. விவசாயிகளை கேட்காமலேயே அவர்களின் நிலத்தை அரசு சட்டப்படி கபளீகரம் செய்யும். எனவே, இந்தியா முழுவதும் இந்த சட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முதல் பலி விவசாயி…
விவசாய நிலம் சிறப்பு ெபாருளாதார மண்டலம், நியூட்ரினோ ஆய்வு மையம், மத்திய, மாநில அரசுகளின் ஆராய்ச்சி மற்றும் அலுவலகங்கள் கட்ட இடம் தேவைப்படும். தரிசு நிலங்கள், பஞ்சமி நிலங்கள், தீர்வை ஏற்படாத தரிசு நிலங்கள் மட்டும் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கர் உள்ளன. ஆனால், மத்திய, மாநில அரசுகள் மூன்று போகம் விவசாய நிலங்களை குறிவைக்கின்றன. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். உதாரணமாக, ஆந்திராவின் புதிய தலைநகர் அமைக்க விவசாய நிலம், அரக்கோணம் கடற்படை விமான தளம், தக்கோலம் மத்திய தொழிலக பாதுகாப்பு படை, பெரும்புதூர் கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க தேர்வான இடங்கள் அனைத்தும் விவசாய நிலங்கள்தான்.
மீத்ேதன் என்கிற மீளா துயர்
டெல்டா விவசாயிகளின் வயிற்றில் அமிலத்தை ஊற்றும் திட்டமாக பார்க்கப்பட்டடது மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம். இதற்காக அந்த மாவட்ட மக்கள் மட்டுமில்லாது சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம், நீதிமன்றத்தில் வழக்கு என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நியூட்ரினோ என்கிற நிலம் அழிக்கும் திட்டம்
நியூட்ரினோ என்கிற திட்டம் விவசாய நிலங்களை அழித்து உருவாக்கப்படும் திட்டம். அதை கொண்டு வரக்கூடாது என்று விவசாயிகள் இன்றும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு, மாநில அரசு உதவியுடன் விவசாய நிலங்களை அடித்து பிடுங்கி, அவர்கள் வாழ்க்கையோடு இணைந்த நிலத்துக்கே வரக் கூடாது என்று முள்வேலி போட்டதை நினைத்து பெரியவர்களே குழந்தைகள் போல குலுங்கி குலுங்கி அழுத காட்சி இன்றும் கண்முன்னே நிற்கிறது.
See more at: http://dinakaran.com