மண் புழு உரம் தயாரிப்பு டிப்ஸ்
மண் புழு உரம் தயாரித்து வரும் ரங்கசாமி கூறுகிறார்
சென்னை, தாம்பரத்தை சேர்ந்தவன் நான். செயற்கை உரங்கள், மண் வளத்தைக் கெடுக்கின்றன. இதற்கு மாற்று, இயற்கை உரங்கள் மட்டுமே. சுற்றுச்சூழலை கெடுக்காத, மண் வளத்தை அதிகரிக்கும் மாமருந்து, மண் புழுக்கள்.
இவை, 120க்கும் மேற்பட்ட வகைகளில் உள்ளன.ஒவ்வொரு வகை மண் புழுவும், வெவ்வேறு விதமான தட்ப வெப்ப சூழலில், வெவ்வேறு ஆழத்தில், மூன்று ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. அனைத்து புழுக்களுமே, 45 நாட்களுக்கு ஒருமுறை, 30 முட்டைகள் வரை இடும். அவை, 15 – 20 செ.மீ., வரை நீளமும், 1 கிராம் எடையும் கொண்டவை.விளை நிலங்களுக்கு பயன்படுத்தப்படும் மண் புழு உரங்களில், நைட்ரஜனை நிலை நிறுத்தும் பாக்டீரியாக்கள், பாஸ்பேட்டை கரைக்கக் கூடிய பாக்டீரியாக்கள், இரும்பு, துத்தநாகம், மக்னீசியம் போன்ற நுண்ணுாட்டச் சத்துக்கள், ஹார்மோன் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன.முதலில், நிழல் நிறைந்த இடத்தை தேர்ந்தெடுத்து, பின், தொட்டியின் அளவை முடிவு செய்ய வேண்டும்.அதில், அதிகப்படியான நீர் வெளியேற, சிறு துளைகள் இட்டு, செம்மண் அல்லது கரிசல் மண் இட வேண்டும்.அதற்கு மேல், காய்கறிக் கழிவு அல்லது மக்கிய மண்ணை பரப்பி, 20 நாட்கள் கழித்து, அதன் மேல் மாட்டுச் சாணத்தை கொட்ட வேண்டும். அடுத்த, 10 நாட்களில், மாட்டுச் சாணத்தின் மேல், மண் புழுக்களை விட வேண்டும்.மேல் பகுதியில் தேங்காய் நார் பரப்பி, இரு நாட்களுக்கு ஒருமுறை, தண்ணீர் தெளித்து வர வேண்டும்.ஒரு மாதத்தில், மேலிருந்து மண் புழுக்கள் உள்ளே ஊடுருவும், மேலே உள்ள மண்ணைச் சாப்பிட்டு, வெளியாகும் கழிவுகள், உரமாக மேல் பகுதியில் படியும். ஒரு மாதத்தில் இருந்து வாரம் ஒருமுறை, மண் புழு உரத்தை அள்ள வேண்டும்.மூன்று மாத நிறை வில், கீழுள்ள மண் பரப்புக்கு மண் புழுக்கள் சென்றுவிடும். இதற்கிடையில், மண் புழுக்கள் அனைத்தும் முட்டையிட்டு, சம எண்ணிக்கையில் புதிய மண் புழுக்கள் உருவாகியிருக்கும்.தொட்டியின் ஓரத்தில், சாண உருண்டையை வைத் தால், அதன் வாசனைக்கு புழுக்கள் வந்துவிடும்; அப்போது நீங்கள் உரத்தை எடுத்து விடலாம்.மக்கிய சாணத்தை மட்டுமே போட வேண்டும். ஈரமான சாணத்தை போடுவதால், அதில் உள்ள வெப்பத்தின் காரணமாகவும், வெளியாகும் வாயுவின் காரணமாகவும் புழுக்கள் இறந்து விடுகின்றன. ஈரப்பதம், 60 சதவீதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.இயற்கை உரத்தில் உற்பத்தியாகும் காய்கறி மற்றும் பயிர்களுக்கு மவுசு இருப்பதால், மண் புழு உரத்துக்கு, தேவை அதிகரித்து வருகிறது. மண் புழுக்களை அரசு வேளாண் துறையினரிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம்.
நன்றி:தினமலர்