வேளாண்மை வளர ஆலோசனை வேண்டும் என்று தொடர்ந்து நமது பிரதமர் பேசிவருகிறார். ஏராளமான பரிந்துரைகள் உள்ளன. அவற்றை உளத் தூய்மையோடு அவர் அணுக வேண்டும். குறிப்பாக, பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறுபவர்களில் பலர் வேளாண்மை ஆலோசகர்கள் என்றும் தங்களைக் கூறிக்கொள்கின்றனர்.
இவர்களுடைய ஆலோசனை களுக்கு மட்டும் காது கொடுக்காமல், உழவர் நலன் சார்ந்த செயல்பாட்டாளர்கள், உழவர் அமைப்புகள் ஆகியோரின் கருத்துகளைக் காதுகொடுத்துக் கேட்பது மட்டுமல்லாது, உண்மையானவற்றைக் கண்கொண்டு பார்க்கவும் வேண்டும்.
மழையே தீர்மானிக்கிறது
எடுத்துக்காட்டாக, இந்தியாவின் பொருளாதாரத்தை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) அடிப்படையில் கணக்கிடுகிறார்கள். இந்த GDP தீர்மானிப்பது பங்குச் சந்தை (பங்குச் சந்தை என்பதே ஒரு வகை சூதாட்டம் என்ற கருத்து ஒருபுறம் இருக்கட்டும்). இந்தப் பங்குச் சந்தையைத் தீர்மானிப்பது எது தெரியுமா? மழை!
எத்தனை பல்டி அடித்தாலும் பங்குச் சந்தையைத் தீர்மானிப்பது, இந்தியாவில் பெய்யும் மழைதான் என்பதை மறந்துவிட முடியாது. அண்மையில் பங்குச் சந்தை பாதாளம் நோக்கிப் பாய்ந்ததற்கு, இந்தியாவில் பருவ மழையின் அளவு 20% வரை குறையும் என்ற அறிவிப்புதான் காரணம் என்பதைச் சற்று ஆழமாக வாசிக்கும் மக்கள் புரிந்துகொள்ள முடியும். அப்படியானால் நமது பொருளாதார மேதைகளாலும், அறிவியல் நிபுணர்களாலும் மழையைக் கொண்டுவர இயலாது என்றுதானே அர்த்தம்.
‘மழையைக் கொண்டுவரும் ஒரே மந்திரவாதி, காடு மட்டுமே’. அந்த மந்திரவாதியை நேரடியாகக் கொல்லாமல், மறைமுகமாகக் கொல்வதற்கான அனைத்து வேலைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. காட்டைக் காக்க வேண்டிய அரசு, காப்பதற்குப் பதில், அழிப்பதற்குத் தாராள அனுமதி வழங்கிவருகிறது.
இரும்பு, அலுமினியம், நிலக்கரி என்று அனைத்தையும் காடுகளிலிருந்து சுரண்டியெடுத்து, காடுகளையும் இயற்கையையும் படுகொலை செய்யப் பெருநிறுவனங்களை அரசு தாராளமாக அனுமதிக்கிறது. வளமான காடுகளின் கீழ்தான் கனிமங்கள் உள்ளன. வனவாழ் மக்களுக்கு மட்டுமல்ல, எல்லா மக்க ளுக்கும் குடிநீரையும், பாசனத்துக்கான நீரையும் வாரிவாரி வழங்கிவருவது காடுகளே. அவற்றின் கழுத்தை நெரித்தால் நீருக்கு நாம் எங்கே செல்வது?
தலையைச் சுற்றி மூக்கைத் தொடலாம்
நமது கொள்கை வகுப்பாளர்கள் மிகச் சிறந்த அறிவாளிகள். நீரை இலவசமாக வாரி வழங்கும் காடுகளை அழித்து, அதற்கு அடியில் உள்ள அலுமினியத்தை எடுத்துக் காய்ச்சி, உருக்கி, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து பணத்தைப் பெறுவார்கள்; அந்தப் பணத்தைக் கொண்டு கடல் நீரை எதிர் சவ்வூடு பரவல் முறையில் தூய்மை செய்து, அதில் கிடைக்கும் நீரைப் பிளாஸ்டிக் குப்பிகளில் அடைத்துக் குறைந்த விலையில் விற்றுவிடுவதற்குக் கொள்கை வகுத்துக் கொடுப்பார்கள்.
‘துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை’ என்றார் வள்ளுவர். இந்த மழை இருக்கிறதே, அதாவது நீர், உணவை விளைவிக்கும் ஒன்றாகவும், தானே ஓர் உணவாகவும் ஆகிறதாம். அட, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு அறிஞருக்குப் புரிந்த உண்மை, இன்றைய அறிஞர்களுக்குப் புரியவில்லையே.
ஓராண்டில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதால் வேளாண்மைக்கு ஆதாரமான காட்டு இயற்கை வளங்கள், ஆறுகள் போன்றவற்றை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எங்கே முதலீட்டாளர்கள்?
இந்தியாவின் GDP உயர வேண்டுமானால், பங்குச் சந்தை உயர வேண்டும், பங்குச் சந்தை உயர வேண்டுமானால், மழை உயர வேண்டும், மழை உயர வேண்டுமானால், காடு உயர வேண்டும். இந்த விதி இன்று நேற்றல்ல, பன்னெடுங்காலமாக நமது முன்னோர் வகுத்த விதி, இதைத்தான் ‘வரப்புயர நீருயரும்’ என்ற பாடலில் சொல்லியிருக்கிறார் ஔவை.
இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளின் வலிமையே இங்குக் கிடைக்கும் வெயிலும் மழையும்தான். இந்த வெளிச்சத்தையும் மழையையும் வைத்துக்கொண்டு திட்டமிடுவதே ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவும். அந்த வகையில், இந்தியாவின் வேளாண் நிலங்களெல்லாம் அள்ளித் தரும் அமுதசுரபிகள்.
கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com
Good