பார்த்தீனியம் செடியை குவித்து மண்புழு உரம் தயாரிக்கலாம் அல்லது இயற்கை களைக்கொல்லி தயாரித்து கட்டுப்படுத்தலாம் என, 15 ஆண்டு கால ஆராய்ச்சிக்குப்பின் இயற்கை விவசாயி மதுராமகிருஷ்ணன் முடிவை தெளிவுபடுத்தியுள்ளார்.
பார்த்தீனியம் இன்று வரை வேண்டாத பொருளாகவே மதிக்கப்படுகிறது. இது உடலில் பட்டால் அலர்ஜியாகி விடுகிறது. இதிலிருந்து பரவும் ஒருவித பவுடர் உடல் முழுவதும் பட்டு தோலில் வீக்கம் உண்டாகி, தடிப்பும், அரிப்பும் ஏற்படுகிறது. கம்பளி பூச்சி உடலில் பட்டது போன்று எரிச்சல் உண்டாகிறது. இந்த ஒவ்வாமை ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்படுகிறது.
ஒரு இடத்தில் களையாக இருப்பது, மற்றொரு இடத்தில் பயனுள்ள செடியாக இருக்கிறது.
களைகளை கட்டுப்படுத்த வேண்டுமே தவிர, ஒழித்து விடக்கூடாது; காரணம் அந்த செடிக்கும் மண்ணுக்கும், பக்கத்து செடிக்கும், அங்குள்ள பூச்சிகளுக்கும் ஒரு உறவு நீடித்துக்கொண்டிருக்கும்.
இந்த மூன்று உறவுகளில், எந்த ஒரு உறவு பாதிக்கப்பட்டாலும் அது மற்ற இரண்டையும் பாதித்துவிடும். பூச்சிகளை அடியோடு ஒழித்து விட்டு, விவசாயம் செய்ய முடியாது. மண் அரிப்பை தடுப்பதிலும், மண் வளத்தை பெருக்குவதிலும், ஈரத்தன்மையை காப்பதிலும் களைகளுக்கு பெரும் பங்கு உண்டு.
இதுபற்றி, இயற்கை விவசாயி மதுராமகிருஷ்ணன் கூறியதாவது:
- பார்த்தீனியம் வேகமாக பெருக்கமடையும் களைச்செடி, தட்ப வெப்ப மாறுதல்கள் அதற்றை பெரிதும் பாதிப்பதில்லை. நேரடியாக பார்த்தீனியத்தை நாம் பயன்படுத்திக்கொள்ளவும் வழி கண்டுபிடிக்கப்படவில்லை.
- அதை அழிக்க நடந்த ஆராய்ச்சிகளின் ஒரு பகுதியை, அதை பயன்படுத்துவதற்கு செய்திருந்தால், ஓரளவு நன்மை கிடைத்திருக்கும்.
- மண் புழுக்களுக்கு ஈடாக, உலகில் பயனுள்ள ஜீவன்கள் ஏதுமில்லை என, விஞ்ஞானம் பதிவு செய்துகொண்டே இருக்கிறது. மனிதர்களின் பல்வேறு தவறுகளால் மண்புழுக்களின் பெருக்கம் தடைபட்டுக்கொண்டே இருக்கிறது.
- மண்ணில் மண்புழுக்களும், நுண்ணுயிரிகளும் இல்லாது போனால், விவசாயம் இல்லாமல் போய்விடும். இதைத்தடுக்க மண்ணுயிரிகளுக்கு தாவர, விலங்குகளின் கழிவுகளை உணவாக கொடுக்கலாம். இதற்கு பார்த்தீனியத்தை தீனியாக தரலாம்.
- பார்த்தீனிய செடிகளை வேறோடு பறித்து, நிழலான ஓரிடத்தில் மொத்தமாக குவித்து, சாணத்தை கரைத்து அதன் மீது தெளிக்க வேண்டும். தென்னை ஓலைகளால் மூடி வைக்க வேண்டும். காய்ந்து போகாமல் இருக்க அவ்வப்போது தண்ணீர் தெளித்து வந்தால், 90 நாட்களில் பார்த்தீனிய செடிகள் அனைத்தும் மண்புழு உரமாக மாறிவிடும். இச்செடி கிடைக்காத சமயத்தில், மண்புழுக்களுக்கு தீனி தயாரிக்க கூடுதல் செலவாகிறது.
- மழை பெய்த மறுநாள் அல்லது அதற்கு அடுத்த நாள் செடிகளை வேரோடு பறிப்பது சுலபம். பார்த்தீனியம் செடிகளை அகற்ற களை எடுக்க வேண்டும்; களை வெட்டுதல் கூடாது.
- நிலத்தை சுத்தப்படுத்தும்போது, சிறிதளவு பார்த்தீனியத்தை விட்டு வைத்தாலும் முற்றிலும் பரவிவிடும். விதைகள் முதிர்வதற்குள் முற்றிலும் அகற்றி விடவேண்டும்.
- இயற்கை சமன்பாடு எல்லை தாண்டும்போது, சமநிலையை உண்டாக்க இயற்கை எப்போதும், வழி வைத்திருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. குறிப்பாக கொய்யா, செம்பருத்தி செடிகளில் இருந்த கள்ளிப்பூச்சி, இரண்டு ஆண்டுக்கு முன் அதிகமாக பரவி பப்பாளி, மல்பெரி, குதிரைமசால் உள்ளிட்ட பயிர்களை அதிகமாக பாதித்தது. இந்த பாதிப்பு பார்த்தீனிய செடிகளையும் விட்டுவைக்கவில்லை.
- ரசாயன களைக்கொல்லிகளால் பார்த்தீனியத்தை அழிப்பது தேவையற்றது. இயற்கை களைக்கொல்லியை தயாரித்து களைச்செடிகளை (பார்த்தீனியத்தை) கட்டுப்படுத்த முடியும்.
- மூன்று கிலோ சுண்ணாம்பு, 10 லிட்டர் தண்ணீர், நான்கு கிலோ உப்பு, மூன்று லிட்டர் கோமியம், இரண்டு லிட்டர் வேப்பெண்ணை கொண்ட கரைசலை தயாரித்து, களைகள் மீது தெளித்தால் பார்த்தீனியம் கட்டுக்குள் வரும்.
- நெல், காய்கறி செடிகளுக்கிடையிலான களைகளை அகற்ற இக்கரைசலை பயன்படுத்தக்கூடாது. விவசாயிகள் விழிப்புணர்வோடு இம்முறையை கடைபிடித்தால், பார்த்தீனியம் ஒரு பிரச்னையே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: தினமலர்